

பெங்களூரு,
திருமணத்துக்கு வற்புறுத்திய காதலியை தங்கும் விடுதியின் 3-வது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 23). இவர் பெங்களூருவில் தங்கியிருந்து அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் (27) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலன் சந்தோஷிடம் ஐஸ்வர்யா தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், திருமணத்தில் விருப்பமில்லாத சந்தோஷ், கடந்த 3 ஆண்டுகளாக ஏதாவது காரணம் சொல்லி திருமணத்தை தள்ளிப்போட்டு வந்துள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த ஐஸ்வர்யா, திருமணம் தொடர்பாக நேரில் பேசி ஒரு முடிவெடுப்பதற்காக பெங்களூரு அபிகெரே பகுதியில் உள்ள வைமேக்ஸ் சர்க்கிள் அருகே இருக்கும் தனியார் தங்கும் விடுதிக்கு வருமாறு சந்தோஷை அழைத்துள்ளார். அதன்பேரில் சந்தோஷும் அங்கு சென்றார்.
விடுதி அறையில் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, மீண்டும் திருமண பேச்சை ஐஸ்வர்யா எடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் சந்தோஷ், ஐஸ்வர்யாவை விடுதியின் 3-வது மாடி ஜன்னல் வழியாக கீழே தள்ளிவிட்டார்.
கீழே விழுந்த ஐஸ்வர்யா அங்கிருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதி, படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி ஐஸ்வர்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கங்கம்மனகுடி போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று ஐஸ்வர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முதலில் இது தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், போலீசாரின் தீவிர விசாரணையில் சந்தோஷ் தான் ஐஸ்வர்யாவை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த திடுக்கிடும் உண்மை அம்பலமானது. இதையடுத்து, தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், தலைமறைவாக இருந்த காதலன் சந்தோஷை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.