மனைவியுடன் தகராறு: 5 வயது மகளை கிணற்றில் வீசிக்கொன்ற கொடூர தந்தை

போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

அமராவதி,

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், கோருகொண்ட மண்டலத்துக்குட்பட்ட காதராடா கிராமத்தை சேர்ந்தவர் ராமவரபு ராஜு. இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ராஜு, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த தனது 5 வயது மகள் லஹரியை திடீரென ஒற்றைக் கையால் தூக்கிச் சென்று அருகில் இருந்த கிணற்றில் வீசி விட்டதாக கூறப்படுகிறது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக கிணற்றுக்குள் இறங்கி சிறுமியை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஊர் மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், மகளை கிணற்றில் வீசி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ராமவரபு ராஜுவை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் மகளை, தந்தை கிணற்றில் வீசிக்கொன்ற இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com