மனைவியுடன் வாக்குவாதம்: குழந்தையை கோடாரியால் கொன்ற கொடூர தந்தை கைது

குற்றம் சாட்டப்பட்டவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
மனைவியுடன் வாக்குவாதம்: குழந்தையை கோடாரியால் கொன்ற கொடூர தந்தை கைது
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் பகுதியை சேர்ந்தவர் ஷம்புத்யாயல் கோரி. இவர் தனது மனைவி மற்றும் 9 மாத குழந்தையுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், இன்றும் வழக்கம்போல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சம்புத்யாயல், தனது மனைவியை கொலை செய்யும் நோக்கில், அங்கிருந்த கோடாரியை கொண்டு தாக்கியுள்ளார். இதில் அவரது மனைவி காயமடைந்தார். மேலும், ஆத்திரம் தீராத அவர், பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் தனது 9 மாத குழந்தையை கோடாரியால் கொலை செய்துள்ளார். இதில் அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொடூர செயலில் ஈடுபட்ட சம்புத்யாயலை போலீசார் கைதுசெய்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் - மனைவி இடையேயான சண்டையில் பச்சிளம் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com