

புதுடெல்லி,
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையொட்டி கடந்த 5-ந்தேதி முதல் விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள், ஜம்மு பிராந்தியத்தில் பெரும்பாலும் விலக்கி கொள்ளப்பட்டன. அங்கு ரத்து செய்யப்பட்ட தொலைபேசி இணைப்புகளை மீண்டும் வழங்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
ஆனால் காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன. அங்கு செல்போன், இணையதள சேவைகள் தொடர்ந்து முடங்கி கிடக்கும் நிலையில், பல இடங்களில் வாகன இயக்கமும், பொதுமக்களின் நடமாட்டமும் கூட குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன.
ஜம்மு காஷ்மீர் வழியாக பயங்கரவாதிகளும் தொடர்ந்து ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளின் முயற்சியை முறியடித்து வருகின்றனர். இந்த நிலையில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக ராணுவ தளபதி பிபின் ராவத் இன்று காஷ்மீர் பயணம் மேற்கொள்கிறார். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் பிபின் ராவத், ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.