ராணுவ தளபதி காஷ்மீர் சென்றார் - பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து ஆய்வு

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் முதல் முறையாக ராணுவ தளபதி பிபின் ராவத் 2 நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ளார். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.
ராணுவ தளபதி காஷ்மீர் சென்றார் - பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து ஆய்வு
Published on

ஸ்ரீநகர்,

இந்திய அரசியல் சட்டம் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் நீக்கியது. இதற்கு மாநிலத்தில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியதால், மாநிலம் முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு 25 நாட்களுக்கு மேலான நிலையில், ஜம்மு பிராந்தியத்தில் கட்டுப்பாடுகள் பெரும்பாலும் நீக்கப்பட்டு உள்ளன. எனினும் காஷ்மீரில் தொடர்ந்து இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன. மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அங்குள்ள நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக ராணுவ தளபதி பிபின் ராவத் காஷ்மீர் சென்றுள்ளார். சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் முதல் முறையாக இந்த பயணத்தை மேற்கொண்ட அவர், நேற்று முன்தினம் லடாக்கில் ஆய்வுகளை மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து நேற்று காலையில் ஸ்ரீநகர் சென்றார். அங்கு ராணுவ உயர் அதிகாரிகளை சந்தித்து பேசிய அவர், மாநிலத்தில் அமலில் இருக்கும் கட்டுப்பாடுகள், அங்கு அமைதி தொடர்வதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் பணியில் இருக்கும் ராணுவத்தின் தயார் நிலை மற்றும் அங்கு நிலவும் பதற்றமான சூழல் குறித்தும் அவர் கேட்டறிந்தார். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் எல்லை பகுதியில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல்களால் பதற்றம் நிலவுவது குறிப்பிடத்தக்கது.

ராணுவ தளபதியின் இந்த காஷ்மீர் பயணத்தின் போது, அந்த மாநில கவர்னர் சத்யபால் மாலிக் மற்றும் பல்வேறு பாதுகாப்பு நிறுவன அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com