காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்து: வீரர்கள் உள்பட 7 பேர் பலி

காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்துக்குள்ளானதில் விமானப்படை வீரர்கள் உள்பட 7 பேர் பலியாகினர்.
காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்து: வீரர்கள் உள்பட 7 பேர் பலி
Published on

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் துணை ராணுவப்படை வீரர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை, பாகிஸ்தான் எல்லையில் புகுந்து பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது குண்டுகள் வீசி அழித்தது.

இதற்கு பழிவாங்கும் விதமாக பாகிஸ்தான் ராணுவம், இந்தியா மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியாபாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நிலவுகிறது.

இதையடுத்து இந்திய விமானப்படை எல்லைப்பகுதியில் இரவு, பகலாக விழிப்புடன் கண்காணித்து வருகிறது. அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் புட்காம் பகுதியில் கண்காணிப்பு பணியில் எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர் ஈடுபட்டு வந்தது.

அந்த ஹெலிகாப்டர் நேற்று காலை 10.40 மணி அளவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கரேந்த் கலான் என்ற கிராமம் அருகே தரையில் விழுந்து இரண்டாக நொறுங்கி தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த விமானி உள்பட வீரர்கள் 6 பேர் கருகி இறந்தனர். மேலும், ஹெலிகாப்டர் விழுந்ததால் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த காஷ்மீரை சேர்ந்த கிபாயத் ஹூசேன் கனாயே என்பவரும் இந்த விபத்தில் சிக்கி இறந்தார்.

எல்லையில் தாக்குதல் நடத்தியதற்கு பழிவாங்கும் விதமாக இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக முதலில் தகவல் பரவியது. ஆனால் இதை இந்தியா மறுத்தது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்திய ஹெலிகாப்டரை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது விபத்துக்குள்ளானது. முதலில், விபத்தில் சிக்கியது அதிவேக போர் விமானம் என கருதினோம். பின்னர் தான் அது ஹெலிகாப்டர் என தெரியவந்தது. இறந்த வீரர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com