2 மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் ராணுவ வீரர் வீரமரணம்

ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் தேஜாவின் மறைவுக்கு ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி, எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
2 மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் ராணுவ வீரர் வீரமரணம்
ராணுவ வீரர் வி.தேஜா
Published on: 

கோஹிமா,

நாகாலாந்தில் பணியில் இருந்தபோது துப்பாக்கிக் குண்டு பாய்ந்து ராணுவ வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார். இன்னும் 2 நாட்களில் 31-வது பிறந்தநாளையும், 2 மாதங்களில் திருமணத்தையும் எதிர்நோக்கியிருந்த நிலையில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ராணுவ வீரர் வீரமரணம்

ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் வி.தேஜா (வயது 31). இவர் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர். தேஜா நாகாலாந்தில் பாதுகாப்பு பணியில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி அன்று வழக்கம்போல பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிரிகளின் எதிர்பாராத தாக்குதலால் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே வீரமரணமடைந்தார்.

பிறந்தநாள்- திருமணம்

அக்டோபர் 7-ம் தேதியான இன்று (புதன்கிழமை) அவருக்கு 31-வது பிறந்தநாள் ஆகும். தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடக்க, மறுபுறம் இன்னும் 2 மாதங்களில் (டிசம்பர் மாதம்-10-ந்தேதி) அவருக்கு திருமணம் நடத்த குடும்பத்தினர் உறவினர்களுடன் இணைந்து பத்திரிக்கை அடிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தனது திருமணக் கொண்டாட்டங்களுக்காக 50 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வரவிருந்த நிலையில், அவரது மரணச் செய்தி குடும்பத்தினருக்கு பேரிடியாக இறங்கியுள்ளது.

மறைந்த பின்பும் வாழ்வளித்த ராணுவ வீரர்

வீரமரணமடைந்த தேஜா, சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பே தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்து, அதற்கான சட்டப்பூர்வ உறுதிமொழியை எடுத்திருந்தார். நாட்டின் எல்லையைக் காத்தவர், தனது மறைவுக்குப் பின்பும் மற்றவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் உடல் உறுப்புகளைத் தானம் செய்திருப்பது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தலைவர்கள் இரங்கல்- அரசு மரியாதை

ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் தேஜாவின் மறைவுக்கு ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி, எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் 15-வது அசாம் ரைபிள்ஸ் படையினரின் ஏற்பாட்டின்படி, தேஜாவின் இறுதிச் சடங்குகள் மற்றும் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் நாளை (வியாழக்கிழமை) காலை 7 மணியளவில் தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிறந்தநாள் மற்றும் திருமணக் கொண்டாட்டத்திற்கு தயாராகிய வீடு, அவரின் இறுதிச் சடங்கிற்காக காத்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com