

அமராவதி,
அர்னாப் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்தியக் குழு ஆந்திராவுக்கு வருகை தந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் அர்னாப் புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக, மாநில சாலைகளில் 220-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. கடலோர மாவட்டங்களின் சில பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன. கோனசீமா மாவட்டத்தில் சுமார் 80 வீடுகள் சேதமடைந்துள்ளன.
கனமழையால் 70,900 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்களும், 10,450 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைப் பயிர்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கோதாவரி டெல்டா கடற்கரையோரம் மற்றும் கிருஷ்ணா, அனகாபள்ளி மாவட்டங்களில் அர்னாப் புயலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட இடங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே அர்னாப் புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்ய மத்தியக் குழுவை நியமிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த சித்தரஞ்சன் தாஸ் தலைமையிலான 7 பேர் அடங்கிய மத்தியக் குழு ஆந்திரப் பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளது.
இந்த மத்தியக் குழு இன்றும், நாளையும் ஆந்திராவில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடுகிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், "சித்தரஞ்சன் தாஸ் தலைமையிலான ஏழு பேர் கொண்ட மத்தியக் குழு ஆந்திராவுக்கு வந்துள்ளது. இந்தக் குழு இன்றும், நாளையும் அர்னாப் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.