

மும்பை,
மும்பை அலிபாக் பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு கட்டிட உள்வடிவமைப்பாளர் அன்வாய் நாயக் மற்றும் அவரது தாய் தற்கொலை செய்த வழக்கு தொடர்பாக தனியார் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை போலீசார் இன்று கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
மும்பையில் உள்ள வீட்டில் இருந்து தன்னை போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி அழைத்துச் சென்றதாக அர்னாப் தெரிவித்திருந்தார். அவரது கைதுக்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சட்ட விதி மீறல் எதுவும் இல்லை என மராட்டிய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் மும்பையில் உள்ள இல்லத்தில் சென்று கைது செய்ய முயன்றபோது காவலர்களை தாக்கியதாக அர்னாப் கோஸ்வாமி, அவரது மனைவி மற்றும் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அர்னாப் கோஸ்வாமியை அலிபாக் மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.