

புதுடெல்லி,
டெல்லியில் கடந்த மாதம் 20ஆம் தேதி கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. 29 ஆயிரம் பேர் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டனர். 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, தீவிரமான, தளர்வுகள் அற்ற ஊரடங்கை முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்தார்.
ஏறக்குறைய ஒரு மாதத்துக்கும் மேல் ஊரடங்கு நடைமுறையில் இருந்த நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதையடுத்து, வரும் திங்கள் கிழமை முதல் கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்று டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவல் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், டெல்லியில் இன்று தொற்று பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் வந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஏறத்தாழ 900-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல் மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்தார். கொரோனா 2-வது அலை பாதிப்பு தொடங்கியதில் இருந்து முதல் முறையாக ஆயிரத்திற்கும் கீழ் தொற்று பரவல் வந்து இருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.