நாராயண் ரானேவை கைது செய்தது நியாயமானதுதான் - ஜாமீன் வழங்கிய நீதிபதி கருத்து

மத்திய மந்திரி நாராயண் ரானேவை கைது செய்தது நியாயமானதுதான் என அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
நாராயண் ரானேவை கைது செய்தது நியாயமானதுதான் - ஜாமீன் வழங்கிய நீதிபதி கருத்து
Published on

மும்பை,

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா மாநிலங்களவை எம்.பி. நாராயண் ரானே கடந்த சனிக்கிழமை மும்பையில் மக்கள் ஆசி யாத்திரை நடத்தினார்.

இந்த யாத்திரை நடத்தியபோது, மராட்டிய முதல்-மந்திரியும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேவை மத்திய மந்திரி நாராயண் ரானா கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.

நாராயண் ரானே பேசுகையில், முதல்-மந்திரிக்கு நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டு கூட தெரியாமல் இருப்பது வெட்கக்கேடானது. சுதந்திர தின உரையின் போது ஆண்டை கணக்கிட்டு கூறுமாறு பின்னால் திரும்பி உதவியாளரிடம் கேட்கிறார். நான் அங்கு இருந்து இருந்தால், அவரை ஓங்கி அறைந்து இருப்பேன் என்றார். மத்திய மந்திரியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து, உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாராயண் ரானே மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் நேற்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தனக்கு ஜாமீன் வழங்குமாறு ராய்கட் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டில் நாராயண் ரானே மனு தாக்கல் செய்தார்.

அந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி எஸ்.எஸ். பாடில், கைது செய்யப்பட்டதற்கான காரணங்கள் மற்றும் பிற காரணங்களை பார்க்கும்போது, இந்த கைது நடவடிக்கை நியாயமானதுதான் என நான் பார்க்கிறேன். ஆனால், அவரை காவலில் எடுத்துவிசாரிக்க தேவையில்லை என கூறி 15 ஆயிரம் ரூபாய் பிணைத்தொகையுடன் நாராயண் ரானேவுக்கு ஜாமீன் வழங்கினார். மேலும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடவேண்டாம் என ரானேவை நீதிபதி எச்சரித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com