போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகைகளின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று விசாரணை

போதைப்பொருள் விவகாரத்தில் கைதாகி உள்ள நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை இன்று நடக்க உள்ளது.
போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகைகளின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று விசாரணை
Published on

பெங்களூரு,

கன்னட திரைஉலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களின் போலீஸ் காவல் நிறைவு பெற்றதையடுத்து 2 பேரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் நடிகைகள் 2 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று பெங்களூரு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில், தனித்தனியாக மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி நடிகைகளின் ஜாமீன் மீதான விசாரணை நடந்தது. பின்னர் விசாரணை 19-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி நடிகைகளின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி சீனப்பா முன்னிலையில் நடந்தது.

அப்போது அரசு சார்பில் ஆஜரான வக்கீல் ரவீந்திரா, நடிகைகளின் ஜாமீன் மனுக்கள் மீது ஆட்சேபனை தெரிவிக்க ஒரு வாரம் காலஅவகாசம் கோரினார்.

இதற்கு நடிகைகளின் வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜாமீன் மனுக்கள் மீது ஆட்சேபனை தெரிவிக்க அரசு வக்கீலுக்கு 2 நாட்கள் கால அவகாசம் வழங்கினார். மேலும் மனுக்கள் மீதான விசாரணையை 21-ந் தேதிக்கு(இன்று) ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) நடிகைகளின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடக்க உள்ளது. விசாரணையின் முடிவில் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்குமா? அல்லது மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்படுமா? என்பது தெரியவரும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com