காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு பொருத்தமற்றது: தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

இந்தியா முழுமைக்கும் ஒரே அரசியலமைப்பை தான் அம்பேத்கர் ஆதரித்தார் என்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பேசினார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு பொருத்தமற்றது: தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்
Published on

நாக்பூர்,

மராட்டிய மாநிலம், நாக்பூரில் நேற்று அரசியலமைப்பு தொடர்பான பூங்கா மற்றும் சட்டமேதை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் அம்பேத்கரின் சிலை திறப்பு விழாவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கலந்து கொண்டார். இதில் மத்திய மந்திரி நிதின் கட்காரி, மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்த தீர்ப்பு பற்றி நினைவுகூர்ந்தார். அவர் பேசுகையில் "சிறப்பு அந்தஸ்துக்கான 370-வது பிரிவை ரத்து செய்யும் வழக்கு எங்கள் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, ஒரு நாட்டிற்கு ஒரு அரசியலமைப்பு மட்டுமே பொருத்தமானது என்று அம்பேத்கரின் வார்த்தைகளை நான் நினைவு கூர்ந்தேன். நம் நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க விரும்பினால் நமக்கு ஒரே ஒரு அரசியலமைப்பு தான் தேவையாகும். 370-வது சட்டப்பிரிவு அம்பேத்கரின் கொள்கைக்கு எதிரானது.

அரசியலமைப்பு சட்டத்திற்காக அம்பேத்கர் விமர்சிக்கப்பட்டார். அரசியலமைப்பு அதிகப்படியான கூட்டாட்சியை கொண்டுள்ளது. போர் காலங்களில் நாடு ஒற்றுமையாக செயல்பட முடியாது என்றும் கூறப்பட்டது. ஆனால் அரசியலமைப்பு அனைத்து சவால்களையும் ஏற்று, நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்கும் என்று அம்பேத்கர் பதிலளித்தார். தற்போது பாகிஸ்தான், வங்கதேசம் அல்லது இலங்கை ஆகிய அண்டை நாடுகளின் நிலைமையை பாருங்கள். ஆனால் நமது நாடு சவால்களை எதிர்கொள்ளும்போது, எப்போதும் ஒற்றுமையாக இருக்கிறது." என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com