

புதுடெல்லி,
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில், செயற்கை மழையை பெய்விக்க முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை எதிர்கொள்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக செயற்கை மழையை உருவாக்குவதன் மூலம் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேகங்களிலிருந்து மழை அல்லது பனித்துளிகள் உருவாகும் வகையில், வானிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பம் இதற்கு பயன்படுத்தப்படுகிறது. இதில், சில்வர் அயோடைடு மற்றும் சோடியம் குளோரைடு போன்ற வேதிப்பொருட்கள், மேகங்களுக்குள் துாவப்படும். இதன் மூலம் மழைத்துளிகள் அல்லது பனிப்படிகங்கள் உருவாக்கப்படும்.
இந்தநிலையில், டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில், செயற்கை மழையைப் பெய்விக்க முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐஐடி கான்பூர் தயாராகி வரும் கிளவுட் சீடிங் கருவிகள் பொருத்தப்பட்ட விமானம் மூலம் செயற்கை மழை பெய்யச் செய்து, காற்றில் உள்ள மாசுத் துகள்களைக் குறைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இரண்டு கட்டங்களாகச் சோதனைகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு முறையும் சில்வர் அயோடைடு மற்றும் சோடியம் குளோரைடு கலந்த எட்டு வேதிப் பொருட்கள் மேகங்களுக்குள் செலுத்தப்பட்டன. இருப்பினும் இந்தச் சோதனைகளால் மழை பெய்யவில்லை. ஆனாலும் இதன் மூலம் குறிப்பிட்ட இடங்களில் காற்றில் உள்ள மாசுபாடு அளவைக் குறைக்க உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.