

இட்டாநகர்,
அருணாசல பிரதேசத்தில் வருகிற 11ந்தேதி மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்காக இதுவரை 184 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் 131 பேர் கோடீசுவரர்கள் என தேர்தல் கண்காணிப்பு அறிக்கை ஒன்று தகவல் தெரிவிக்கின்றது.
இதன்படி 67 வேட்பாளர்கள் (36 சதவீதம்) ரூ.5 கோடிக்கு கூடுதலான சொத்துகளும், 44 வேட்பாளர்கள் (24 சதவீதம்) ரூ.2 முதல் ரூ.5 கோடி வரையிலான சொத்துகளும் வைத்துள்ளனர்.
இந்த தேர்தலில், 3வது முறையாக ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்காக போட்டியிடும் முதல் மந்திரி காண்டு, பணக்கார வேட்பாளராக உள்ளார். அவர், ரூ.143 கோடியே 87 லட்சத்து 82 ஆயிரத்து 786 அளவில் அசையும் சொத்துகளும் மற்றும் ரூ.19 கோடியே 62 லட்சத்து 75 ஆயிரத்து 356 அளவில் அசையா சொத்துகளும் உள்ளன என பிரமாண பத்திரத்தில் தெரிவித்து உள்ளார். காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தவரான காண்டுவின் மொத்த சொத்துகள் ரூ.163 கோடிக்கும் கூடுதலாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று காங்கிரஸ் கட்சியின் மெபோ தொகுதி வேட்பாளர் லாம்போ டாயேங் ரூ.148 கோடிக்கும் கூடுதலான சொத்துகளுடன் 2வது பணக்காரராக உள்ளார். தவாங் தொகுதியில் போட்டியிடும் மற்றொரு பா.ஜ.க. வேட்பாளர் செரிங் டாஷி ரூ.109 கோடிக்கு கூடுதலான சொத்துகளுடன் பணக்காரர் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.9.86 கோடியாக உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.