கெஜ்ரிவாலை ஊழல் செய்தவர் என்றுதான் அழைக்கிறோம்: பாஜக எம்.பி. மனோஜ் திவாரி

ரேஷன் கார்டுகளுக்காக ஏழை மக்களை கதற வைத்தவர்தான் அரவிந்த் கெஜ்ரிவால் என்று மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.
கெஜ்ரிவாலை ஊழல் செய்தவர் என்றுதான் அழைக்கிறோம்: பாஜக எம்.பி. மனோஜ் திவாரி
Published on

புதுடெல்லி,

டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர், அமலாக்கத்துறை காவலில் வைத்து 10 நாட்கள் விசாரிக்கப்பட்டார். இதையடுத்து, நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கெஜ்ரிவாலை பயங்கரவாதிபோல டெல்லி சிறையில் நடத்துகின்றனர் என்று பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் குற்றம் சாட்டினார். இதுகுறித்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

திகார் சிறையில் இருந்தாலும் கூட அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மக்களுக்காகவே உழைத்து வருகிறார். கெஜ்ரிவால் டெல்லி மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். அதை நான் உங்களுக்கு வாசித்து காட்ட விரும்புகிறேன்.

அவர் அனுப்பியுள்ள செய்தியில் என் பெயர் அரவிந்த் கெஜ்ரிவால், நான் பயங்கரவாதி அல்ல. நீங்கள் இப்படி நடந்துகொள்வதற்கு வெட்கமாக இல்லையா? மனைவி உள்பட குடும்ப உறுப்பினர்களை நான் சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை. கண்ணாடி ஜன்னல் வழியாகவே சந்திக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு எதற்காக கெஜ்ரிவால் மீது இந்த அளவுக்கு வெறுப்பு என தெரியவில்லை. இவ்வாறு சஞ்சய் சிங் கூறினார்.

இதுகுறித்து டெல்லி பாஜக எம்.பி.யான மனோஜ் திவாரி கூறுகையில், "கெஜ்ரிவாலை யார் பயங்கரவாதி என்று அழைத்தது? கெஜ்ரிவாலையும், அவரது சகாக்களையும் பயங்கரவாதிகள் என்று ஏன் அழைக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை. அவரை ஊழல்வாதி என்றுதான் அழைத்தோம். அவர் டெல்லியின் எதிரி.

பென்ஷனுக்காக முதியோரை அழ வைத்தவர்தான் இந்த கெஜ்ரிவால். ரேஷன் கார்டுகளுக்காக ஏழை மக்களை கதற வைத்தவர். சுத்தமான காற்றுக்கும், தண்ணீருக்கும் மக்களை குரலெடுத்து அழ வைத்தவர்தான் அரவிந்த் கெஜ்ரிவால்.

ஊழல் செய்வதற்கு முன்பு சிறையில் உள்ள வசதிகள், பிரச்சினைகள் குறித்து ஆம் ஆத்மி தலைவரான கெஜ்ரிவால் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சிறை விதிகள் அனைவருக்கும் பொதுவானவைதான். சட்டம் தனது கடமையை செய்து வருகிறது "என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com