குஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஒரு வாய்ப்பளியுங்கள் - அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஒரு வாய்ப்பளியுங்கள் என்று டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
image courtesy: ANI
image courtesy: ANI
Published on

அகமதாபாத்,

குஜராத்தில் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பெற்ற அமோக வெற்றியைத் தொடர்ந்து டெல்லி முதல்மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத்தில் வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஒரு வாய்ப்பு அளிக்குமாறு குஜராத் மக்களிடம் அவர் வலியுறுத்தினார். மேலும், தனது கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் குஜராத்தில் நிலவும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று கூறினார்.

அகமதாபாத்தில் திரங்கா யாத்திரையின் போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

"எனக்கு அரசியல் செய்யத் தெரியாது. ஆனால் ஊழலை எப்படி ஒழிப்பது என்று தெரியும். டெல்லியில் ஊழலை ஒழித்துவிட்டோம். இன்று நீங்கள் டெல்லியில் உள்ள எந்த அலுவலகத்திற்கு சென்றாலும் லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை. அதேபோல் பஞ்சாப்பில் பகவந்த் மான் ஆட்சிக்கு வந்து 10 நாட்களிலேயே ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டார். நீங்கள் நம்பவில்லை என்றால், பஞ்சாபில் உள்ள உங்கள் நண்பர்களிடம் கேளுங்கள். இன்று, பஞ்சாப்பில் தாசில்தார் அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்களில் அனைத்து வேலைகளும் 10 நிமிடங்களுக்குள் முடிந்துவிடும்.

இன்று நான் எந்தக் கட்சியையும் விமர்சிக்க வரவில்லை. பாஜகவையோ, காங்கிரசையோ தோற்கடிக்க வரவில்லை. குஜராத்தையும், குஜராத் மக்களையும் வெற்றி பெறச் செய்யவே வந்துள்ளேன். டெல்லி மக்கள், பஞ்சாப் மக்கள் செய்தது போல ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். எங்களின் ஐந்தாண்டு காலப் பணி உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், நீங்கள் மறுபடியும் இவர்களை ஆட்சிக்குக் கொண்டு வரலாம்."

இவ்வாறு கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com