தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பான மாநில முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டம் மன்னிப்புக் கேட்ட கெஜ்ரிவால்

மாநில முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டம் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பானதால் சர்ச்சை எழுந்தது இதை தொடர்ந்து கெஜ்ரிவால் மன்னிப்புக் கேட்டு கொண்டார்.
தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பான மாநில முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டம் மன்னிப்புக் கேட்ட கெஜ்ரிவால்
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை அதிதீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 730 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் நாட்டில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 1 கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 24 லட்சத்து 28 ஆயிரத்து 616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 279 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 36 லட்சத்து 48 ஆயிரத்து 159 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 263 பேர் உயிரந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 86 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 13 கோடியே 54 லட்சத்து 78 ஆயிரத்து 420 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, கொரோனா தடுப்பூசி தடுப்பாடு, ரெம்டெசிவிர் மருந்து, படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடுகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், நாட்டில் நிலவி வரும் கொரோனா பரவல் நிலவரம், தடுப்பூசி செலுத்தும் பணிகள், படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி தற்போது அவரச ஆலோசனை நடத்தினார்.

நாட்டில் கொரோனா தொற்று மிக அதிகமாக உள்ள மராட்டியம், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், தமிழகம், கேரளா, கர்நாடகம், டெல்லி உள்ளிட்ட 11 மாநில முதலமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைகளின் போது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக "பெரிய சோகம்" ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை எழுப்பினார்.அனைத்து ஆக்சிஜன் ஆலைகளையும் ராணுவம் மூலம் கையகப்படுத்த வேண்டும்.

டெல்லிக்கு வரும் ஆக்ஸிஜன் டேங்கர்களின் சீரான இயக்கத்தை உறுதி செய்ய அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களையும் வழிநடத்த வேண்டும் என கூட்டு கொண்டார்.

வழக்கமாக பிரதமர் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களின் உரைகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாவது இல்லை. இதை மீறி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அரசு, அவரது பேச்சை மட்டும் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக வெளியிட்டிருந்தது.

அதுவும், அந்த ஆலோசனைக் கூட்டம் முடியும் முன்பாக வெளியாகி, மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டத்தின் இடையில், இந்த விவகாரம் தனது கவனத்திற்கு வந்ததை அடுத்து, பிரதமர் மோடி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இதுகுறித்துப் பிரதமர் மோடி பேசும் போது கூறியதாவது:-

நமது மரபு மற்றும் பாரம்பரிய வழக்கத்தின்படி இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்களைத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவது கிடையாது. ஆனால், இன்று அவை மீறப்பட்டுள்ளன. ஒரு மாநில முதல்வர் இதைத் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்கிறார். இது எந்த வகையிலும் முறையானது அல்ல. இந்த விவகாரத்தில் என்றும் விதிமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம் எனக் குறிப்பிட்டார்.

இதில், கெஜ்ரிவாலின் பெயரைக் குறிப்பிடாமல் நாகரீகமாகப் பிரதமர் மோடி, தவறை சுட்டிக் காட்டியதாகக் கூறப்படுகிறது. எனினும், பிரதமர் குறிப்பிடுவது தன்னைத்தான் என முதல்வர் கெஜ்ரிவாலும் புரிந்து கொண்டார். இதற்காக அவர் உடனடியாக அளித்த பதிலில் கூறும்போது, நீங்கள் கூறியதை இனி நினைவில் கொள்வோம். கொரோனாவால் பலியான ஆன்மாக்கள் சாந்தி அடைய வேண்டும். அவர்களது குடும்பத்தாருக்கு நம்பிக்கை கிடைக்க வேண்டும். எனது சார்பில் எதுவும் தவறுகள் நிகழ்ந்திருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன்.

இன்றைய கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துகள் மிகவும் சிறப்பாக இருந்தன. இதன் அடிப்படையில் எங்களுக்கு அளித்த உத்தரவுகளை நாங்கள் பின்பற்றுவோம் என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.

இதையடுத்து, மத்திய அரசின் சார்பில் ஓர் அறிக்கை வெளியானது. அதில், இந்த ஆலோசனைக் கூட்டத்தின் எந்த ஒரு பகுதியையும் தொலைக்காட்சிகளில் நேரடியாக வெளியிட அனுமதிக்கப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்காக முதல்வர் கெஜ்ரிவால் மன்னிப்புக் கேட்டதும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

இதற்கிடையே, இன்று நடைபெற்ற பிரதமரின் ஆலோசனை கூட்டத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அரசியல் ஆதாயம் தேட முயன்றதாகப் புகார் கிளம்பியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com