

வாகா,
பஞ்சாப் மாநிலத்தில் அட்டாரி- வாகா எல்லை அமைந்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தனின் எல்லைப்பகுதியான இங்கு ஒவ்வொரு நாள் மாலையும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு இரு நாட்டு கொடியும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களால் இறக்கப்படும்.
இந்த நிகழ்வின் போது இரு நாட்டு வீரர்களும் கம்பீரத்துடனும், மிடுக்குடனும் ஆக்ரோஷத்துடனும் அணிவகுப்பை மேற்கொண்டு கொடியை இறக்குவர். இந்த அணிவகுப்பை காண நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கேலரிகளில் வரிசையாக அமர்ந்து, பயிற்சியில் அணிவகுத்துச் செல்லும் வீரர்களை உற்சாகப்படுவார்கள்.
இந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வாகா எல்லை நிகழ்ச்சியை காண பொதுமக்களுக்கு தடை இன்றுமுதல் விதிக்கப்படுகிறது. இதனை எல்லை பாதுகாப்புப்படை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.