நீதித்துறை மீது அழுத்தம் செலுத்த முயற்சி: ராகுல்காந்தி மீது மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு

ராகுல்காந்தி கோர்ட்டுக்கு கட்சியினருடன் செல்வது நாடகம். நீதித்துறை மீது அழுத்தம் செலுத்த அவர் முயற்சிக்கிறார் என்று மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு குற்றம் சாட்டினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து சூரத் கோர்ட்டில் காங்கிரஸ் தலைவர்களுடன் நேரில் சென்று ராகுல்காந்தி மேல்முறையீடு செய்தார்.

இதற்கு மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ராகுல்காந்தியுடன் காங்கிரஸ் தலைவர்கள் கோர்ட்டுக்கு சென்றிருப்பது ஒரு குடும்பத்தின் மீதான விசுவாசம். நாட்டை விட அந்த குடும்பம் உயர்வானது என்று அவர்கள் கருதுகிறார்கள்.

குற்றவாளியான ராகுல்காந்தி கூட நேரில் செல்ல தேவையில்லை. பொதுவாக, மேல்முறையீடு செய்ய குற்றவாளிகள் நேரில் செல்ல மாட்டார்கள். ஆனால், அவர் தனது கட்சி தலைவர்களையும், நெருக்கமானவர்களையும் அழைத்து சென்றிருப்பது வெறும் நாடகம்.

நீதித்துறை மீது தேவையற்ற அழுத்தத்தை செலுத்துவதற்கு குழந்தைத்தனமான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். எந்த இந்திய கோர்ட்டும் இதுபோன்ற தந்திரங்களுக்கு அடிபணியாது.

நீதித்துறை விவகாரங்களை கையாள எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. காங்கிரஸ் தேவையற்ற அழுத்தம் செலுத்துவது ஏன்? கடந்த காலங்களில் ஒட்டுமொத்த அரசியல் கட்சியும் கோர்ட்டை முற்றுகையிட்டது உண்டா?

முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், குற்றவாளியாக அறிவிக்கப்பட்டபோது காங்கிரஸ் அமைதியாக இருந்தது. ப.சிதம்பரம், டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கும் ஆதரவு அளிக்கவில்லை.

ஆனால், ராகுல்காந்தி என்ற தனிமனிதருக்காக காங்கிரஸ் இந்த நாடகத்தை அரங்கேற்றுகிறது.

அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்தால், அமலாக்கத்துறை அலுவலகத்தை காங்கிரஸ் முற்றுகையிடுகிறது. கோர்ட்டு எதிர் தீர்ப்பு அளித்தால், கோர்ட்டை முற்றுகையிடுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் ஜனநாயகத்தை சிறுமைப்படுத்துகிறது. இதை அனைவரும் கண்டிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

கார்கே பதில்

ஆனால், இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

ராகுல்காந்தியுடன் செல்ல காங்கிரஸ் தலைவர்கள் தனிப்பட்ட விருப்பத்தின்பேரில் முடிவு செய்தனர். ஒரு சிறிய வழக்கில் கூட குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து கோர்ட்டுக்கு செல்வது வழக்கம். ராகுல்காந்தியோ, நாட்டுக்காக போராடுகிறார்.

அவருடன் சென்றது பலத்தை காட்டும் முயற்சி அல்ல. ஆதரவு அளிப்பதற்கான அடையாளம் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com