

புதுடெல்லி
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே ஜிண்டால் வீட்டின் அருகே 150 மீட்டர் தொலைவில் இன்று மாலை 5.05 மணியளவில் குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்தது. . இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், ஒருவர் காயமடைந்துள்ளார், 4 கார்கள் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியள்ளது.
தகவலறிந்த டெல்லி போலீசார் அப்பகுதியில் உள்ள சாலைகளை மூடி உள்ளனர். தொடர்ந்து, குண்டுவெடித்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து தீயணைப்பு அதிகாரி பிரேம் லால் கூறும் போது
குண்டுவெடிப்பு தொடர்பாக மாலை 5:45 மணியளவில் எங்களுக்கு அழைப்பு வந்தது, பின்னர் நாங்கள் அந்த இடத்தை அடைந்தோம். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என கூறினார்.
குண்டு வெடிப்பு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் இஸ்ரேல் தூதரகத்தின் அருகில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் காபி ஆஸ்கெனாசியிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் இஸ்ரேல் தூதரகத்திற்கும் அங்கு பணியாற்றும் அதிகாரிகளுக்கும் முழு பாதுகாப்பு வழங்கப்படும் என இஸ்ரேல் தூதரிடம் தான் உறுதியளித்தாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் விரைவில் கண்டறியப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் காபி ஆஸ்கெனாசியிடம் கூறும் போது
அனைத்து இஸ்ரேலிய தூதர ஊழியர்களின் பாதுகாப்பிற்கும் இந்திய அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். குண்டுவெடிப்பில் ஈடுபட்ட அனைவரையும் கண்டுபிடிப்பதில் உறுதியுடன் செயல்படுவார்கள் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எனக்கு உறுதியளித்து உள்ளார். நான் அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். முழு ஒத்துழைப்பையும் இஸ்ரேலில் இருந்து தேவைப்படும் எந்த உதவியையும் செய்வதாக உறுதியளித்துள்ளேன் என கூறினார்.