

ஜெய்பூர்,
ராஜஸ்தான் மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 101 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாட் ஆகிய இருவரில் யார் முதல் மந்திரியாக பதவியேற்பார்கள்? என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில், அசோக் கெலாட் முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அசோக் கெலாட் ஏற்கனவே 2 முறை முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார். 67 வயதாகும் கெலாட் தற்போது 3-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். சச்சின் பைலட் முந்தைய மன்மோகன் சிங் அரசில் அமைச்சராக பதவி வகித்திருந்தார். 41 வயதாகும் இளம் தலைவரான அவருக்கு முதல்வர் பொறுப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அசோக் கெலாட் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக்கூறப்படுகிறது.