பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி நாளை தொடக்கம்

பெங்களூருவில் நாளை (திங்கட்கிழமை) சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான கோலாகல ஏற்பாடுகள் எலகங்கா விமானப்படை தளத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி நாளை தொடக்கம்
Published on

சர்வதேச விமான கண்காட்சி

பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் 2 ஆண்டுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி நடைபெறுவது வழக்கம். மத்திய பாதுகாப்புத்துறை சார்பில் 'ஏரோ இந்தியா' என்ற பெயரில் இந்த விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் வருகிற 13-ந் தேதியில் (திங்கட்கிழமை) இருந்து 17-ந் தேதி வரை 5 நாட்கள் சர்வதேச விமான கண்காட்சி நடைபெறும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அறிவித்திருந்தது.

அதன்படி, எலகங்கா விமானப்படை தளத்தில் நாளை (திங்கட்கிழமை) சர்வதேச விமான கண்காட்சி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார். இதில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் மத்திய, மாநில மந்திரிகள் கலந்துகொள்ள உள்ளனர். சர்வதேச விமான கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளார்.

பிரதமர் தொடங்கி வைக்கிறார்

அதாவது டெல்லியில் இருந்து இரவு 7.15 மணியளவில் எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வருகை தரும் பிரதமரை, கவர்னர் மற்றும் முதல்-மந்திரி ஆகியோர் வரவேற்க உள்ளனர். பின்னர் எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக ராஜ்பவன் ரோட்டில் உள்ள கவர்னர் மாளிகைக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்ல இருக்கிறார். அதன்பிறகு, நாளை (திங்கட்கிழமை) சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் தொடங்கி வைக்க இருப்பதாக கர்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலகங்காவில் உள்ள விமானப்படை தளத்தில் சர்வதேச விமான கண்காட்சிக்கான ஏற்பாடுகளை மத்திய பாதுகாப்புத்துறை, கர்நாடக அரசு மற்றும் பெங்களூரு மாநகராட்சி செய்துள்ளது. விமான கண்காட்சியில் மொத்தம் 807 அரங்குகள் அமைக்கப்பட இருப்பதாகவும், அவற்றில் 107 அரங்குகள் வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேஜஸ் போர் விமானம்

5 நாட்கள் நடைபெறும் விமான கண்காட்சியில் நமது நாட்டை தவிர வெளிநாடுகளை சேர்ந்த விமானங்களும் விண்ணில் பறந்து சாகசங்களில் ஈடுபட உள்ளன. குறிப்பாக இந்தியா பெவிலியனில் இருந்து தேஜஸ் போர் விமானம் முதல் முறையாக விமான கண்காட்சி பங்கேற்க இருக்கிறது. ஒற்றை என்ஜின், நவீன தொழில் நுட்பம், குறைந்த எடை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்ட தேஜஸ் போர் விமானம் விண்ணில் பறந்து சாகசத்தில் ஈடுபட உள்ளதுடன், பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கவும் தயாராக உள்ளது.

கண்காட்சிக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த விமான நிறுவன முதலீட்டாளர்கள் பங்கேற்க இருப்பதால், அவர்களுடன் தொழில் முதலீடு உள்ளிட்டவை குறித்து மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

இறைச்சி விற்க தடை

எலகங்கா விமானப்படை தளத்தில் சர்வதேச விமான கண்காட்சி நடைபெறுவதையொட்டி, பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் நாளை முதல் விமானங்கள் இயக்குவதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் எலகங்காவை சுற்றி டிரோன் பறக்கவும், கட்டிட பணிகளுக்காக உயரமான கிரேன் வாகனங்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விமான கண்காட்சியையொட்டி எலகங்காவை சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் நாளை முதல் வருகிற 17-ந் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுபோல் எலகங்கா விமானப்படை தளத்தை சுற்றி 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வருகிற 20-ந்தேதி வரை இறைச்சி விற்பனை செய்யவும், இறைச்சிக்கடைகளை திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பு

மேலும் விமான கண்காட்சி காரணமாகவும், பிரதமர் வருகை காரணமாகவும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் எலகங்கா விமானப்படை தளத்திற்கு சென்று போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். அதுபோல், நாளை கவர்னர் மாளிகையில் இருந்து எலகங்காவுக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்வதால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக சிறப்பு போலீஸ் கமிஷனர் சலீம் தெரிவித்துள்ளார்.

விமானங்கள் ஒத்திகை

பெங்களூருவில் 5 நாட்கள் நடைபெறும் விமான கண்காட்சியை கண்டுகளிக்க பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி, ஒரு நபர் ரூ.2,500 கட்டணம் செலுத்தி, டிக்கெட் பெற்றுக் கொண்டு கண்காட்சிக்கு சென்று விமானங்களின் சாகசங்களை பார்த்து ரசிக்க முடியும். இதற்காக ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்ய மக்களுக்கு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டு இருந்தது.

விமான கண்காட்சியில் பங்கேற்க நமது நாட்டை தவிர பல்வேறு நாடுகளை சேர்ந்த விமானங்கள் ஏற்கனவே எலகங்கா விமானப்படை தளத்திற்கு வந்துள்ளன. கடந்த சில நாட்கள் விமானங்கள் விண்ணில் பறந்து சாகச ஒத்திகையில் ஈடுபட்டன. அதுபோல், நேற்றும் எலகங்கா விமானப்படை தளத்தில் விமானங்கள் விண்ணில் பறந்தபடி ஒத்திகையில் ஈடுபட்டன. அது மெய்சிலிர்க்கும் விதமாக இருந்தது. விமானங்கள் விண்ணில் பறந்தபடி ஒத்திகையில் ஈடுபட்டதை மக்கள் கண்டுகளித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com