

புதுடெல்லி,
ஆசியாவின் திறன் வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் சீன அதிபர் ஜி ஜின்பிங் முதலிடத்தையும், பிரதமர் நரேந்திர மோடி 2-வது இடத்தையும் பிடித்துள்ளதாக லோவி இன்ஸ்டிட்யூட் நடத்திய 'ஆசிய ஆற்றல் குறியீடு 2026' ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த கொள்கை சார்ந்த ஆராய்ச்சி நிறுவனமான லோவி இன்ஸ்டிட்யூட், ஆசியாவில் உள்ள 27 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆய்வு மேற்கொண்டு, 'ஆசிய ஆற்றல் குறியீடு 2026' பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையில், ஆசியாவின் மிகவும் திறன் வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் சீன அதிபர் ஜி ஜின்பிங் முதலிடத்திலும், பிரதமர் நரேந்திர மோடி 2-வது இடத்திலும் உள்ளனர்.
2018-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வரும் இந்த குறியீட்டு பட்டியலில் அமெரிக்காவும், சீனாவும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 2026-ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த ஆற்றல் தரவரிசையில் 100-க்கு 78.9 புள்ளிகளை பெற்று அமெரிக்கா முதலிடத்தையும், 73.6 புள்ளிகளுடன் சீனா 2-வது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்த பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டை விட 0.5 புள்ளிகள் கூடுதலாக பெற்று, மொத்தம் 40.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. குறிப்பாக, கலாசார தாக்கத்தில் 2.3 புள்ளிகள் கூடுதலாக பெற்று 43.8 புள்ளிகளையும், பாதுகாப்பு பிரிவில் 2.1 புள்ளிகளையும், எதிர்கால ஆற்றல் வளங்களில் 1.2 புள்ளிகளையும், ராணுவ திறனில் 0.5 புள்ளிகளையும் இந்தியா கூடுதலாக பெற்று அசத்தியுள்ளது. மேலும், கூட்டு ஒத்துழைப்பு பிரிவில் 70.3 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
பல்வேறு துறைகளில் இந்தியா முன்னேற்றம் கண்டிருந்தாலும், பொருளாதார திறனில் கடந்த ஆண்டை விட 0.7 புள்ளிகள் சரிந்து 26.4 புள்ளிகளை பெற்றுள்ளது என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.