அசாம் சட்டசபை தேர்தல்; காங்கிரசில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பொறுப்பு

அசாமில் கடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.க. 64 இடங்களை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றியது.
புதுடெல்லி,
அசாமில் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், 126 உறுப்பினர்களை கொண்ட அசாம் சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சி உள்பட பல்வேறு கட்சிகளும் தயாராகி வருகின்றன.
தேர்தல் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், இதற்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக காங்கிரஸ் கட்சியில் 4 பேர் கொண்ட தேர்வு குழு உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு பிரியங்கா காந்தி வதேரா தலைமை தாங்குவார்.
அவருடைய நெருங்கிய உதவியாளரான இம்ரான் மசூத், சப்தகிரி சங்கர் உலாகா மற்றும் டாக்டர் ஸ்ரீவெல்லா பிரசாத் ஆகியோர் குழுவின் மற்ற மூன்று உறுப்பினர்களாக செயல்படுவர்.
காங்கிரஸ் கட்சியானது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உட்பட பல எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது.
கடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.க. 64 இடங்களை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றியது. அதன் கூட்டணி கட்சிகளான ஏ.ஜி.பி., யு.பி.பி.எல். மற்றும் பி.பி.எப். முறையே ஒன்பது, ஏழு மற்றும் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருந்தன. எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு 26 இடங்களே கிடைத்தன.






