மகளிருக்கு ரூ.3 ஆயிரம் உதவித்தொகை: அசாமில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட பா.ஜ.க.

லவ் ஜிஹாத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிருக்கு ரூ.3 ஆயிரம் உதவித்தொகை: அசாமில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட பா.ஜ.க.
Published on

கவுகாத்தி,

நாட்டில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடப்பு ஆண்டில் நடைபெற உள்ளது. அதனுடன் சேர்த்து, 6 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், கேரளா மற்றும் அசாம் ஆகிய இரு மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்ட தேர்தலாக நடத்தி முடிக்கப்படும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும்.

இதன்படி மே 20-ந்தேதி அசாம் சட்டசபைக்கான பதவிக்காலம் முடிவடைகிறது. இங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில் சட்டசபை தேர்தலையொட்டி அசாம் மாநிலத்தில் தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.

அதில், பொது சிவில் சட்டம் கொண்டுவருவதாகவும், அருணோதய் திட்டத்தின் கீழ் மகளிருக்கு வழங்கப்படும் மாதாந்திர நேரடி வங்கி உதவி தொகையை ரூ.3,000 ஆக உயர்த்துவதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

31 வாக்குறுதிகளை பட்டியலிட்ட அம்மாநில முதல்-அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அசாம் மாநிலத்தை "பிரகாசமான மாநிலமாக" மாற்றுவதே பாஜகவின் நோக்கம் என்று கூறினார். உத்தரகாண்ட் மற்றும் குஜராத்தின் அடிச்சுவடுகளைப் பின்பற்றியும், பாஜகவின் முக்கிய செயல்திட்டத்தை ஒட்டியும், முதல்-அமைச்சர் பொது சிவில் சட்டம் கொண்டுவருவதாகவும், லவ் ஜிஹாத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மேலும் அசாமில் 6ஆவது அட்டவணையின்கீழ், பழங்குடியினப் பகுதிகளைத் தவிர்த்து பிற இடங்களில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அசாமை வெள்ளமற்ற மாநிலமாக மாற்ற முயற்சிப்போம் என்றும், முதல் இரண்டு ஆண்டுகளில் ரூ.18,000 கோடி செலவிடுவோம் என்றும் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com