18 வயது மேற்பட்டவர்களுக்கு ஆதார் வழங்குவதை நிறுத்த முடிவு; அசாம் முதல்-மந்திரி பேட்டி

அசாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்படாது என முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.
18 வயது மேற்பட்டவர்களுக்கு ஆதார் வழங்குவதை நிறுத்த  முடிவு; அசாம் முதல்-மந்திரி பேட்டி
Published on

கவுகாத்தி,

இந்தியாவின் அண்டை நாடான வங்காள தேசத்தில் இருந்து சட்டவிரோதமாக அசாமுக்குள் குடியேறுபவர்கள், ஆதார் அட்டையைப் எளிதாக பெற்றுவிடுகின்றனர். இதனால் அசாம் மாநில அரசு பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வந்தது.

தேசிய மக்கள் பதிவேடு

இதையடுத்து, National Register of Citizen எனப்படும் தேசிய மக்கள் பதிவேட்டில் பெயர் இருப்பவர்களுக்கு மட்டுமே ஆதார் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும் சட்டவிரோத குடியேறிகள் ஆதார் பெறுவதை அம்மாநில அரசால் தடுக்க இயவில்லை.

குறிப்பாக பார்பேட்டா, துப்ரி, மரிகாவன், நாகோன் ஆகிய மாவட்டங்களில், மக்கள் தொகையைவிட ஆதார் அட்டை வைத்திருப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

அமைச்சரவை கூட்டம்

இந்த நிலையில், அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அசாமில் 18 வயதுக்கு மேற்பட்டோர் முதன்முறையாக ஆதார் அட்டை கோரி விண்ணப்பித்தால் வழங்கபோவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் இந்த ஆவணத்தைப் பெறுவதைத் தடுக்கும் பொருட்டு, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அட்டைகள் இனி வழங்கப்படாது என அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

ஆதார் அட்டை

விதிவிலக்கான நேரங்களில், ஆதார் அட்டை வழங்குவதற்கான அனுமதியை மாவட்ட கலெக்டர் மாநில அரசுக்கு ஒரு முன்மொழிவை அனுப்ப வேண்டும். மாநிலத்தில் ஆதார் அட்டை வழங்கும் பணி ஒரு நிறைவு நிலையை எட்டியுள்ளது. சில மாவட்டங்களில், இது 100 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. கூடுதல் ஆதார் அட்டைகளைப் பெறும் இந்த நபர்கள் யார் என்பதை நாம் கண்டறிய வேண்டும்.

சட்டவிரோதமாக வங்காள தேசத்தினர் யாரும் ஆதார் அட்டைகளைப் பெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com