அதானியுடன் இணைத்து டுவிட்டர் பதிவு: ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு - அசாம் முதல்-மந்திரி அறிவிப்பு

அதானியுடன் இணைத்த டுவிட்டர் பதிவு தொடர்பாக ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்படும் என்று அசாம் முதல்-மந்திரி அறிவிப்பு வெளியிட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கவுகாத்தி,

காங்கிரசில் இருந்து விலகிய முக்கிய தலைவர்களின் பெயரை இணைத்து 'அதானி' பெயரை உருவாக்கி ராகுல் காந்தி நேற்று முன்தினம் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதில் அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் பெயரும் இடம்பெற்று இருந்தது. இதற்கு அவர் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இதைத்தொடர்ந்து ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர உள்ளதாக அவர் அறிவித்து உள்ளார். அசாமில் வருகிற 14-ந்தேதி பிரதமர் மோடி சுற்றுப்பயணத்தை முடித்தபின் இந்த வழக்கை தாக்கல் செய்வதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறியிருந்தது அவதூறானது. பிரதமர் எங்கள் மாநிலத்துக்கு வந்து சென்றபிறகு இதற்கு நாங்கள் பதிலடி கொடுப்போம். இது தொடர்பாக நிச்சயம் கவுகாத்தியில் ஒரு அவதூறு வழக்கு தொடரப்படும்' என தெரிவித்தார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, போபர்ஸ் ஊழல் மற்றும் நேஷனல் ஹெரால்டு ஊழல் தொடர்பாக ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பாமல் தாங்கள் கண்ணியம் காத்ததாக ஹிமந்தா பிஸ்வா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com