அசாம் வெள்ள பாதிப்பு 110 பேர் பலி; 27 லட்சம் விலங்குகள் பாதிப்பு

அசாமில் கடந்த ஒரு வார காலமாக கோரதாண்டவம் ஆடும் வெள்ள பாதிப்புகளால் இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளனர்.
அசாம் வெள்ள பாதிப்பு 110 பேர் பலி; 27 லட்சம் விலங்குகள் பாதிப்பு
Published on

கவுகாத்தி

அசாம் மாநிலத்தில் கடந்த வாரத்திற்கும் மேலாக பெய்துவரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா உள்ளிட்ட 13 ஆறுகள் மற்றும் அதன் துணை ஆறுகளில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் காரணமாக தற்போது 24 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களிலுள்ள சுமார் 3 ஆயிரம் கிராமங்கள் பெரும் பாதிப்பில் சிக்கியுள்ளன.

வெள்ளத்தால் வீடுகள், சாலைகள், விளைநிலங்கள் மோசமாக சிதைந்துள்ளதுடன் சுமார் 47 ஆயிரம் பேர் வீடிழந்து தவிக்கின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் 649 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 110 பேர் வெள்ளத்தாலும், நிலச்சரிவில் சிக்கியும் உயிரிழந்துள்ளனர்.

25 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் மக்கள் மட்டுமின்றி விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அசாமின் உலகப் புகழ் பெற்ற காசிரங்கா தேசியப் பூங்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 8 ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் உள்பட 100க்கு மேற்பட்ட காட்டுயிர்கள் இறந்தன.

உலகிலேயே ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் அதிக அளவில் இருக்கும் இடம் இந்த காசிரங்கா தேசியப் பூங்காதான். இந்த நூற்றாண்டுத் தொடக்கத்தில் அழிவின் விளிம்பில் இருந்த இவை கொஞ்சம் கொஞ்சமாக மீட்கப்பட்டன.

தற்போது காசிரங்கா தேசியப் பூங்காவில் மட்டும் குறைந்தது 2,400 ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் உள்ளன.

ஆனால், இந்த ஆண்டு பருவமழையில் இந்த பரந்து விரிந்த தேசியப் பூங்காவில் 85 சதவீதப் பரப்பளவு வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், காண்டாமிருகங்கள், முள்ளம்பன்றிகள், எருமைகள், மான்கள் உள்ளிட்ட விலங்குகள் வெள்ளத்தில் மூழ்கியும், வெள்ளத்தில் இருந்து தப்பி ஓடும்போது வாகனங்களில் அடிபட்டும் இறந்துள்ளன.

மொத்தம் 27 லட்சம் விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com