‘சுற்றிலும் பல ஆண்கள்..’ பயந்துகொண்டே ரெயிலில் பயணித்த அசாம் இளம்பெண் சடலமாக மீட்பு

ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் அருகே ரெயில் தண்டவாளத்தில் காயங்களுடன் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
முன்பதிவற்ற பெட்டியில் ஏறிய பெண் சடலம்
Published on: 

கவுகாத்தி,

ஆந்திரபிரதேசத்தில் இருந்து கவுகாத்தி நோக்கி ரெயிலில் பயணித்த இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்பு

அசாம் மாநிலம் கவுகாத்தி பகுதியை சேர்ந்தவர் இமாஸ்ரீ போரோ (வயது 23). கல்லூரி மாணவியான இவர் நடனக் கலைஞராகவும் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் ஒரு நடன கலை குழுவினருடன் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்குச் சென்றிருந்தார். கடந்த 6-ந்தேதி இரவு விசாகப்பட்டினத்தில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்குத் திரும்புவதற்காக விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலின் முன்பதிவில்லா பெட்டியில் ஏறியுள்ளார்.

ரெயிலில் ஏறிய இமாஸ்ரீ போரோ பயணித்துக் கொண்டிருந்தபோது தனது தோழியிடம் இரவு 2 மணியளவில் தொடர்பு கொண்டு தன்னைச் சுற்றி பல ஆண்கள் இருப்பதாகவும், தனக்கு மிகவும் பயமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து அவருடைய மொபைல் சுவிட்ச் ஆஃப் ஆகி தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 7-ந்தேதி ரெயில் கவுகாத்தி வந்தடைந்தபோது, அவரை பார்ப்பதற்காக பெற்றோர் ரெயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். ஆனால், ரெயிலில் இருந்த இமாஸ்ரீ மாயமாகியுள்ளார். இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர், இது குறித்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் அருகே ரெயில் தண்டவாளத்தில் காயங்களுடன் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இது காணாமல் போன இமாஸ்ரீயின் உடலாக இருக்குமோ என்று போலீசார் சந்தேகித்தனர். பின்னர், சடலத்தை அடையாளம் காண்பதற்காக இமாஸ்ரீயின் பெற்றோரிடம் கூறியுள்ளனர். அந்த இடத்திற்கு வந்த அவர்கள் உயிரிழந்து இருப்பது தனது மகள் தான் என்று காவல் துறையிடம் கூறியுள்ளனர்.

ரெயில்வே போலீசாரும் உள்ளூர் காவல்துறையும் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இமாஸ்ரீ கொலை செய்யப்பட்டாரா? ரெயிலில் இருந்து யாரும் கீழே தள்ளி விட்டார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது. சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com