நாடு முழுவதும் குடிமக்கள் பதிவேடு பட்டியல் எடுக்க வேண்டும்: அசாம் கவர்னர்

நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் தயார் செய்ய வேண்டும் என்று அசாம் கவர்னர் ஜெகதீஷ் முக்கி தெரிவித்துள்ளார். #NRC
நாடு முழுவதும் குடிமக்கள் பதிவேடு பட்டியல் எடுக்க வேண்டும்: அசாம் கவர்னர்
Published on

கவுகாத்தி,

வங்காளதேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் இறுதி வரைவு அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 3,29,91,384 விண்ணப்பதாரர்களில் 2,89,83,677 பேர் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

40 லட்சம் பேர் பதிவேட்டில் சேர்க்கப்படவில்லை. தற்போதைய நிலையில் இவர்கள் சட்டவிரோத குடிமக்களாக கருதப்படுவார்கள். எனினும், விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், குடிமக்கள் பட்டியலில் 40 லட்சம் பேர் விடுபட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்ததால், இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.டெல்லி சென்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், என்ஆர்சி விவகாரம் வங்காளதேசம் உடனான இந்தியாவின் உறவை அழிக்கும், என்றார்.

அசாம் குடிமக்கள் பதிவேடு தொடர்பாக மத்திய அரசை, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அசாம் கவர்னர் ஜெகதீஷ் முக்கி, குடிமக்கள் பதிவேடு பட்டியலை நாடு முழுவதும் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து கவர்னர் ஜெகதீஷ் முக்கி கூறியிருப்பதாவது: நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாநிலங்களிலும் குடிமக்கள் பதிவேடு பட்டியல் எடுக்க வேண்டும்.

நாட்டில் வாழும் வெளிநாட்டவர்கள் பற்றிய தகவலை அறிந்து கொள்ளும் உரிமை மத்திய அரசுக்கு உள்ளது. ஒவ்வொரு மாநிலமும் என்.ஆர்.சி பட்டியைலை தயார் செய்தால், சிறப்பானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், அசாம் மக்களின் நலனை கருத்தில் கொண்டே இத்தகைய பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் கவர்னர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார் கவர்னர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com