

கவுகாத்தி,
அசாம் மாநிலம் கோல்ஹாட் மாவட்டத்தில் உள்ள சல்மாரியா தேயிலை தோட்டத்தில் ஏராளமானோர் வேலைபார்த்து வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை இரவு பெண் தொழிலாளர்கள் உள்பட ஏராளமானோர் விஷச்சாராயம் வாங்கி அருந்தினர். இதில் பெண்கள் உள்பட 30 பேர் உயிரிழந்தனர். மேலும், 300க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் பலர் உயிரிழந்தனர். இதனால் விஷச்சாராய சாவு எண்ணிக்கை உயர்ந்து வந்தது. 149 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே உள்ளூரில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்களுக்கும், போலீசுக்கும் இடையே மறைமுகமான தொடர்பு உள்ளது என உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சப்பட்ட இடங்களில் இருந்து பேரல், பேரலாக சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.