

திஸ்பூர்,
அசாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தில், கழுத்தில் பெரிய ட்ராக்டர் டயர் சிக்கி தவித்து வந்த காட்டு யானை ஒன்றை வனத்துறையினர் பல மணி நேர போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்டுள்ளனர்.
அசாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்திற்கு உட்பட்ட நுமாலிகர் மற்றும் மரோங்கி வனப்பகுதிகளில் உள்ள காட்டு யானைகள் உணவு தேடி வருவது வழக்கம். இதையடுத்து ஒரு காட்டு யானையின் கழுத்தில் தற்செயலாக பழைய டிராக்டர் டயர் ஒன்று மாட்டி இறுக்கிக் கொண்டது.
டயருடன் யானை வலம் வந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, அசாம் வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனவிலங்கு காப்பக மருத்துவக் குழுவினர் உடனடியாக களத்தில் இறங்கினர். அடர்ந்த காடு மற்றும் தேயிலைத் தோட்டப் பகுதிகளுக்குள் யானையைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.
நேற்று (வியாழக்கிழமை) மாலை யானையைக் கண்டறிந்த மீட்புக் குழுவினர், அதற்கு மயக்க மருந்து செலுத்தி அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன் பிறகு, அதன் கழுத்தில் மிக இறுக்கமாக இருந்த டயர் பத்திரமாக வெட்டி அகற்றப்பட்டது.
வனத்துறையினரின் இந்த துரிதமான நடவடிக்கைக்கு பிறகு, யானைக்கு தேவையான முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டு, அது மீண்டும் பாதுகாப்பாக அதன் கூட்டத்துடன் அனுப்பி வைக்கப்பட்டது. வனத்துறையினரின் இந்த அர்ப்பணிப்புடன் கூடிய மீட்புப் பணிக்கு சமூக வலைதளங்களில் பரவலான பாராட்டுகள் குவிந்து வருகின்றன.