சட்டசபை இடைத்தேர்தல் : மேற்கு வங்காளத்தில் 3 தொகுதிகளிலும் மம்தா கட்சி வெற்றி

சட்டசபைக்கு நடந்த இடைத்தேர்தலில் மேற்கு வங்காளத்தில் 3 தொகுதிகளிலும் மம்தா கட்சி வெற்றி பெற்றது. உத்தரகாண்டில் தேர்தல் நடந்த ஒரே தொகுதியை பா.ஜனதா தக்க வைத்தது.
சட்டசபை இடைத்தேர்தல் : மேற்கு வங்காளத்தில் 3 தொகுதிகளிலும் மம்தா கட்சி வெற்றி
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காள சட்டசபையில் 3 தொகுதிகளுக்கு கடந்த 25-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த 3 தொகுதிகளிலும் மாநிலத்தை ஆளும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

கலியாகஞ்ச் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் தாபன்தேவ் சிங்கா தனக்கு அடுத்த படியாக வந்த பாரதீய ஜனதா வேட்பாளர் கமல்சந்திர சர்காரை 2,414 ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

கரக்பூர் சதாரில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பிரதீப் சர்கார், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாரதீய ஜனதா வேட்பாளர் பிரேம் சந்திர ஜாவை 20 ஆயிரத்து 853 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார். இந்த தொகுதி ஏற்கனவே பாரதீய ஜனதா மாநில தலைவர் திலீப் கோஷ் வெற்றி பெற்றிருந்த தொகுதி ஆகும். அவர் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதால் இங்கு இடைத்தேர்தல் நடந்தது.

கரீம்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பீமலேந்து சின்காராய், தனக்கு அடுத்தபடியாக வந்த பாரதீய ஜனதா வேட்பாளர் ஜெய்பிரகாஷ் மஜூம்தாரை 23 ஆயிரத்து 910 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இந்த வெற்றி மக்களின் வெற்றி என்று மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்தார். மேலும், பாரதீய ஜனதாவின் அராஜகத்தை மக்கள் நிராகரித்து உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

இந்த வெற்றியை மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம். இது மதச்சார்பின்மை, ஒற்றுமைக்கானது. தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிரானது. பாரதீய ஜனதாவின் அதிகார அராஜகத்துக்கு கிடைத்த பதிலடி எனவும் அவர் கூறினார்.

உத்தரகாண்ட் மாநிலம், பித்தோரகார் சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், பாரதீய ஜனதா வேட்பாளர் சந்திரபந்த், தன்னை எதிர்த்து களம் கண்ட காங்கிரஸ் வேட்பாளர் அஞ்சு லுந்தியை 3,267 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

இதன் மூலம் இந்த தொகுதியை பாரதீய ஜனதா தக்க வைத்துக்கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com