சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: புதுச்சேரியில் நாளை போக்குவரத்து மாற்றம்

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் எந்த அரசியல் கட்சிகளின் வாகனங்களும் எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: புதுச்சேரியில் நாளை போக்குவரத்து மாற்றம்
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டசபை தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 9-ந் தேதி நடந்தது. இதில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி ஒரு அணியாகவும், காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு அணியாகவும் களத்தில் உள்ளன. இதே போல் த.வெ.க.. நேயம் மக்கள் கழக கட்சியுடன் இணைந்தும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிடுகிறது.

இதனால் புதுவை மாநிலத்தில் 4 முனை கடும் போட்டி நிலவியது. அதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என புதுவையில் 294 பேர் தேர்தலை சந்தித்தனர். புதுவையில் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சமாக 91.23 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்த சூழலில் புதுவையில் நாளை (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி புதுச்சேரியில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரி சீனியர் போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

புதுச்சேரி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (திங்கட்கிழமை) லாஸ்பேட்டையில் உள்ள மகளிர் பொறியியல் கல்லூரி, மோதிலால்நேரு பாலிடெக்னிக்கல்லூரி, தாகூர் கலை அறிவியல் கல்லூரிகளில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்கள் அமைந்துள்ள லாஸ்பேட்டை பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி மகளிர் பொறியியல் கல்லூரிக்கு வரும் வேட்பாளர்கள், முகவர்கள் வாகனங்களை நாவலர் நெடுஞ்செழியன் மேல்நிலைப் பள்ளியிலும், மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரிக்கு செல்பவர்கள் வள்ளலார் பள்ளி பின்புறமும், தாகூர் கலை அறிவியல் கல்லூரிக்கு செல்பவர்கள் கல்லூரி மைதானத்திலும் நிறுத்த வேண்டும்.

ஜீவா காலனியில் இருந்து விமான நிலைய சாலைக்கு செல்லும் வாகனங்கள் நாவலர் நெடுஞ்செழியன் சந்திப்பில் மாற்றி விடப்படும். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை வழியாக வரும் வாகனங்கள் ஜெ.டி.எஸ். சந்திப்பில் ராஜாஜி சாலைக்கு மாற்றிவிடப்படும். விமான நிலைய கல்லூரிசாலை வழியாக வரும் வாகனங்கள் நீதிபதிகள் குடியிருப்பு பகுதியில் மாற்றி திருப்பிவிடப்படும். அந்த வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் எந்த அரசியல் கட்சிகளின் வாகனங்களும் எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com