புதுச்சேரி, கேரளம், அசாமில் வாக்குப்பதிவு நிறைவு

புதுச்சேரி, கேரளம், அசாமில் வாக்குப்பதிவு நிறைவு

புதுச்சேரி, கேரளம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு சதவீதம் வெளியானது.

சட்டசபை தேர்தல்: இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நிலவரம்

புதுச்சேரி, கேரளம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு சதவீதம் வெளியானது.

புதுச்சேரி (30 தொகுதிகள்): 89.08 சதவீதம் வாக்குப்பதிவு

கேரளா (140 தொகுதிகள்): 77.38 சதவீதம் வாக்குப்பதிவு

அசாம் (126 தொகுதிகள்): 85.04 சதவீதம் வாக்குப்பதிவு

புதுச்சேரியில் வரலாறு காணாத அளவில் 89.08 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.

கேரளம், அசாம் ஆகிய 2 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்த வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வந்தவர்களுக்கு டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது.

மாலை 5 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 86.92 சதவீதமும், கேரளத்தில் 75.01 சதவீதமும் அசாமில் 84.42 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி,கேரளம், அசாம் ஆகிய மாநிலங்களில் எந்தவித அசாம்பாவிதம் நிகழாமல் அமைதியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்படுகின்றன. எஸ்.ஐ.ஆர் காரணமாக வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளதாக தேர்தல் அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சட்டசபை தேர்தல்: மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நிலவரம்

புதுச்சேரி (30 தொகுதிகள்): 86.92 சதவீதம் வாக்குப்பதிவு

கேரளா (140 தொகுதிகள்): 71.01 சதவீதம் வாக்குப்பதிவு

அசாம் (126 தொகுதிகள்): 84.42 சதவீதம் வாக்குப்பதிவு

அசாமில் வாக்குப்பதிவு நிறைவு

காலை 7 மணிக்கு தொடங்கிய அசாம் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 2021 தேர்தலில் அசாமில் 82.42 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

அசாமில் வாக்குப்பதிவு நிறைவு

காலை 7 மணிக்கு தொடங்கிய அசாம் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 2021 தேர்தலில் அசாமில் 82.42% வாக்குகள் பதிவாகி இருந்தது.

புதுச்சேரி தேர்தல் - மாலை 5 மணி நிலவரப்படி 86 சதவீத வாக்குப்பதிவு

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 86 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவுபெறுகிறது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு சற்று நேரத்தில் நிறைவடைய உள்ள நிலையில், இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

கேரளாவில் ஓட்டு போட்ட பிறகு வாக்காளர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கேரளம், அசாம், புதுச்சேரி, ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதோடு கர்நாடாகம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய 3 மாநிலங்களில் உள்ள எம்.எல்.ஏ தொகுதிகளுக்கான வாக்க்குப்பதிவும் இன்று நடைபெற்றது.

கேரளாவில் ஓட்டு போட்ட பிறகு வாக்காளர் ஒருவர் மயங்கி விழுந்து இறந்துள்ளார். திருச்சூரில் உள்ள வாணியம்பாரா வாக்குச்சாவடியில் 61 வயதான வினோதம் என்பவர் வாக்களித்த பிறகு இறந்தார். அவர் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் வரிசையில் நின்று தனது வாக்கை செலுத்தி இருந்தார்.

புதுச்சேரியில் கவர்னரின் மனைவிக்கு விரலில் மை வைக்க மறந்த ஊழியர்கள்

புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் தனது தாயார் மற்றும் மனைவியுடன் வந்து சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார். வாக்களித்த பின் கவர்னர் கைலாஷ்நாதன் தனது மனைவி பீனாவுடன் விரலை காட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அப்போது கவர்னரின் மனைவிக்கு வாக்களித்த பின் விரலில் மை வைக்காதது தெரிய வந்தது. இதனையடுத்து உடனடியாக அவருக்கு மை வைக்கப்பட்டது. அதன் பிறகு கவர்னரும், அவரது மனைவியும் மை வைத்த விரலுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

காங்கிரஸ் கூட்டணி 100க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் - கேரள எதிர்க்கட்சி தலைவர் பேட்டி

கேரள எதிர்க்கட்சி தலைவர் பி.டி.சதீசன் கூறியதாவது:-

காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய ஜனநாயக முன்னணி நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மீண்டும் வெற்றி பெறும். அனைத்து தேசிய அளவிலான கருத்து கணிப்புகளிலும் ஐக்கிய ஜனநாயகம் முன்னணி நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. கேரள மக்கள் அறிவானவர்கள். அவர்கள் அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியையும் சமமாகவே பார்க்கிறார்கள்.

கேரள மக்கள் நல்ல அரசியல் நம்பிக்கையின் அடிப்படையில் வாக்களிக்கிறார்கள். பலர் தங்களது தபால் வாக்குகளை இழந்துள்ளனர். மூன்று முறை சென்றும் தங்களது வாக்கு சீட்டுகளை பெறாதவர்களும் உள்ளனர் என்றார்.

கேரளத்தில் தொங்கும் சட்டமன்றம் அமையும் - பாஜக தலைவர் ராஜீவ் சந்திர சேகர்

கேரளம் மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திர சேகர் ஜவகர்நகர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இது ஒரு முக்கியமான தேர்தல். மக்கள் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். சட்டமன்றத்திற்கு சென்று ரகளை செய்வதற்கோ, கணினியை உடைப்பதற்கோ அல்ல. மாறாக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வாய்ப்பை நாங்கள் கேட்கிறோம். கேரளாவில் தொங்கு சட்டமன்றம் அமையும். பாஜக ஒரு தீர்க்கமான சக்தியாக உருவெடுக்கும் என்றார்.

கேரளம் மாநிலத்தில் கொச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் நடிகர் ப்ரித்விராஜ்,

கேரளாவில் 90 சதவீதம்

கேரளாவில் 90 சதவீத வாக்குகள் பதிவாக வாய்ப்பு உள்ளதாக நில தலைமை தேர்தல் அதிகாரி கூறி உள்ளார்.

அசாம் (126 தொகுதிகள்): 75.91 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.

கேரளா (140 தொகுதிகள்): 62.71சதவீதம் வாக்குப்பதிவு

புதுச்சேரி (30 தொகுதிகள்): 72.40 சதவீதம் வாக்குப்பதிவு

மாலை 3 மணி நிலவரப்படி நிலவரம்:-

கேரளம் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார் நடிகர் பகத் பாசில்.

புதுச்சேரி பேரவைத் தேர்தலில் தனது வாக்கு செலுத்தினார் காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம்

சட்டசபை தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை வாக்குப்பதிவு நிலவரம்

புதுச்சேரி (30 தொகுதிகள்): 56.83 சதவீதம் வாக்குப்பதிவு

கேரளா (140 தொகுதிகள்): 49.70 சதவீதம் வாக்குப்பதிவு

அசாம் (126 தொகுதிகள்): 59.63 சதவீதம் வாக்குப்பதிவு

கேரளா சட்டசபை தேர்தல்: கொச்சியில் மனைவியுடன் வந்து வாக்களித்தார் நடிகர் மம்முட்டி

புதுச்சேரி சட்டசபை தேர்தல்: ரூ.1,500 மதிப்புள்ள வாக்காளர் கூப்பன்கள் விநியோகம் - கட்சியினரிடையே மோதல்

புதுச்சேரியின் பாகூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.1,500 மதிப்புள்ள வாக்காளர் கூப்பன்கள் விநியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வாக்காளர்களை கவரும் நோக்கில் என்.ஆர். காங்கிரஸ் ஆதரவாளர்கள் ரூ.1,500 மதிப்புள்ள பரிசு கூப்பன்களை விநியோகித்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, புதுச்சேரியின் பாகூரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த பரிசு கூப்பன் விநியோகம் அதிகாலையிலேயே தொடங்கியதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம், தி.மு.க. மற்றும் என்.ஆர். காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே மோதலுக்கு வழிவகுத்தது. இதைத் தொடர்ந்து, போலீசார் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

கேரள சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வாக்களிப்பு

140 தொகுதிகளைக் கொண்ட கேரள மாநிலத்தில், சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது வாக்கை செலுத்தினார்.

புதுச்சேரி: காரைக்காலில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்கு எந்திரத்தில் புகை: நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு

புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும்நிலையில், காரைக்காலில் உள்ள கோத்துகுளம் அரசு உயர் நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் இருக்கும் வாக்கு எந்திரத்தில் (VVPAT) புகை வந்ததால் பரபரப்பு நிலவியது. பேட்டரியில் ஏற்பட்ட அதீத வெப்பத்தால் புகை வந்திருக்கலாம் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி: வாக்குப்பதிவு நிலவரம்

புதுச்சேரி (30 தொகுதிகள்): 37.06 சதவீதம் வாக்குப்பதிவு

கேரளா (140 தொகுதிகள்): 33.28 சதவீதம் வாக்குப்பதிவு

அசாம் (126 தொகுதிகள்) : 38.92 சதவீதம் வாக்குப்பதிவு

இரு சக்கர வாகனத்தில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி

30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணிக்கும்,காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுதவிர நாம் தமிழர் கட்சி, த.வெ.க. -நேயம் மக்கள் கழகம் கூட்டணியும் களத்தில் உள்ளன. இதனால் புதுச்சேரியில் 4 முனை போட்டி நிலவுகிறது. இங்கு மொத்தம் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று தனது வாக்கை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்-அமைச்சர் ரங்கசாமி, “இரண்டு தொகுதிகளிலும் நான் வெற்றி பெறுவேன். எண்ணிக்கையை விட, ஆட்சி அமைப்பதுதான் எனக்கு முக்கியம். நாங்கள் எப்போதும் மக்களுக்காகவே இருக்கிறோம். மக்களோடு இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

சட்டசபை தேர்தல்: காலை 9.30 மணி நிலவரப்படி: வாக்குப்பதிவு நிலவரம்

புதுச்சேரி (30 தொகுதிகள்): 17.41 சதவீதம் வாக்குப்பதிவு

கேரளா (140 தொகுதிகள்): 16.23 சதவீதம் வாக்குப்பதிவு

அசாம் (126 தொகுதிகள்) : 17.87 சதவீதம் வாக்குப்பதிவு

நாங்கள் எப்போதும் மக்களை நம்புகிறோம், மக்களும் எங்களை நம்புகிறார்கள் - பினராயி விஜயன்

கேரள கண்ணூரில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தனது வாக்கைச் செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “பொய் பிரச்சாரத்தால் இடதுசாரி ஜனநாயக முன்னணியை தோற்கடிக்க முடியாது. நாங்கள் எப்போதும் மக்களை நம்புகிறோம், மக்களும் எங்களை நம்புகிறார்கள்.. கடந்த பத்து ஆண்டுகளாக நாங்கள் மக்களுடன் பயணித்து வருகிறோம், அந்த பயணம் தொடர வேண்டும். நாங்கள் மக்களுடன் இருக்கிறோம், மக்களும் எங்களுடன் இருக்கிறார்கள்... மதவாதப் பிரச்சாரத்தால் எங்களைத் தோற்கடிக்க முடியாது” என்று கூறினார்.

கேரளம்: கண்ணூரில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தனது வாக்கைச் செலுத்தினார்

புதுச்சேரி தேர்தல் 2026: வாக்காளர்களை வரவேற்கும் ரோபோ

30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணிக்கும், காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுதவிர நாம் தமிழர் கட்சி, த.வெ.க. -நேயம் மக்கள் கழகம் கூட்டணியும் களத்தில் உள்ளன. இதனால் புதுச்சேரியில் 4 முனை போட்டி நிலவுகிறது. இங்கு மொத்தம் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் வி.ஓ.சி அரசுப் பள்ளிக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்களை நீலா என்ற ரோபோ வரவேற்கிறது. இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

அசாம் சட்டசபை தேர்தல் 2026: வாக்குப்பதிவு தீவிரம்

அசாம் மாநில சட்டசபை தேர்தலுக்க்கன வாக்குப்பதிவு நடைபெற்று வரும்நிலையில், பல்வேறு வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக வாக்காளர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

கேரள சட்டசபை தேர்தல் 2026 : வாக்குப்பதிவு விறுவிறுப்பு

கேரளாவில் பல்வேறு இடங்களில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கும் நேரத்திலேயே நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

திருவனந்தபுரம், மூடவன்முகலில் உள்ள வாக்குச்சாவடிக்கு, நேமம் தொகுதியின் அமைச்சரும் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளருமான வி. சிவன்குட்டியும், நடிகர் மோகன்லாலும் வாக்களித்தனர்.

கேரளாவில் 140 தொகுதிகளில் 883 வேட்பாளர்கள் போட்டியிடும்நிலையில், 2.71 கோடி வாக்காளர்கள் 30,471 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க உள்ளனர்.

சட்டசபை தேர்தல்: இளைய தலைமுறையினருக்கு பிரதமர் மோடி கோரிக்கை

3 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும்நிலையில், இளைய தலைமுறையினருக்கு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், வாக்காளர்கள் அனைவரும் பெருந்திரளாக வந்து தங்கள் வாக்குகளை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக, நமது இளைஞர்களுக்கும், பெண் வாக்காளர்களுக்கும் ஜனநாயக நடைமுறையை வலுப்படுத்துமாறு நான் கோரிக்கை விடுக்கிறேன். புதுச்சேரியின் எதிர்காலத்தை வடிவமைக்க ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.

2026 அசாம் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், அசாம் மக்கள் பெருமளவில் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். மாநிலத்தின் இளைஞர்களும் பெண் வாக்காளர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று, இந்தத் தேர்தலை ஜனநாயகம் மற்றும் பொதுக் கடமையின் கொண்டாட்டமாக மாற்றுவார்கள் என நம்புகிறேன்.

2026 சட்டசபை தேர்தலில் பெருந்திரளான வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதிசெய்யுமாறு கேரள மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். சாதனை அளவிலான வாக்குப்பதிவு, கேரளாவின் ஜனநாயக உணர்விற்கு புத்துணர்ச்சி அளிக்கும். குறிப்பாக, மாநிலத்தின் இளைஞர்களும் பெண்களும் முன்வந்து வாக்களிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தல்: அனல் பறந்த பிரசாரம்

தமிழகம், மேற்குவங்கம், அசாம், கேரளம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றிக்கு கடந்த மாதம் 15-ந் தேதி தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அவற்றில் அசாம், கேரளம், புதுச்சேரியில் இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடக்கிறது.

தேர்தலையொட்டி கடந்த சில வாரங்களாக இந்த மாநிலங்களில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அனல் பறந்த பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது.

அசாம்

126 தொகுதிகளை கொண்ட அசாமில் ஆட்சியை தக்க வைக்க பா.ஜனதா கூட்டணியும், அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் கூட்டணியும் மல்லுக்கட்டுகின்றன. இங்கு மொத்தம் 722 வேட்பாளர்கள் களத்தில் உள்ள னர்.

கேரளம்

140 தொகுதிகளைக் கொண்ட கேரள மாநிலத்தில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே போட்டி நிலவுகிறது. இங்கு தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி பீடத்தில் அமர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணியும் தனது பலத்தை காட்ட கோதாவில் உள்ளது. இங்கு பிரதான கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் உள்பட 883 பேர் போட்டியிடுகின்றனர்.

புதுச்சேரி

30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணிக்கும்,காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுதவிர நாம் தமிழர் கட்சி, த.வெ.க. -நேயம் மக்கள் கழகம் கூட்டணியும் களத்தில் உள்ளன. இதனால் புதுச்சேரியில் 4 முனை போட்டி நிலவுகிறது. இங்கு மொத்தம் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தொடங்கியது வாக்குப்பதிவு

தமிழகம், மேற்குவங்கம், அசாம், கேரளம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றிக்கு கடந்த மாதம் 15-ந் தேதி தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அவற்றில் அசாம், கேரளம், புதுச்சேரியில் இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடக்கிறது.

இந்நிலையில் அசாம், கேரளம், புதுச்சேரியில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. முன்னதாக அங்கு அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு (Mock Poll) நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியநிலையில், மாலை 6 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்கலாம். இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகளை செய்துள்ளது.

வாக்குப்பதிவுக்காக பல்லாயிரக்கணக்கான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமானதாகக் கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதல் துணை ராணுவப்படையினர் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிரக் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற ஏதுவாக, தேர்தல் நடைபெறும் இந்த மாநிலங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், அமைதியான முறையில் தேர்தல் நடைபெறவும் மதுக்கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து, பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை

இன்று பதிவாகும் வாக்குகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்படும். அடுத்த மாதம் (மே) 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com