சசிகலாவின் மறு ஆய்வு மனு வழக்கு விசாரணை பட்டியலில் இருந்து நீக்கம்: உச்சநீதிமன்றம்

சசிகலாவின் மறு ஆய்வு மனு வழக்கு விசாரணை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சசிகலாவின் மறு ஆய்வு மனு வழக்கு விசாரணை பட்டியலில் இருந்து நீக்கம்: உச்சநீதிமன்றம்
Published on

புதுடெல்லி,

வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 66 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டில் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.இதை எதிர்த்து அவர்கள் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில், அந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி 4 பேரின் தண்டனையையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் தி.மு.க. பொதுச்செயலாளர் க. அன்பழகன் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் கீழ்க்கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பு வழங்கினர்.ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அவர் விடுவிக்கப்பட்டார். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு, அவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. சசிகலா உள்ளிட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மறு ஆய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், அமிதவராய் ஆகியோர் விசாரிப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், ரோகிண்டர் பாலி பரிமன் இந்த மறு ஆய்வு மனுவை விசாரிக்க சசிகலா தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சசிகலா மறு ஆய்வு மனு இன்றைய வழக்கு விசாரணைப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. வேறு அமர்வு மற்றொரு நாளில் சசிகலாவின் மறு ஆய்வு மனுவை விசாரிக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com