மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்குடன் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சந்திப்பு


மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்குடன் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சந்திப்பு
x

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லி,

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா (வயது 39). இவர் கடந்த ஜூன் 25-ந்தேதி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றார். அமெரிக்காவை சேர்ந்த ‘ஆக்சியம் ஸ்பேஸ்’ என்னும் தனியார் நிறுவனத்தின் 'ஆக்சியம்-4' திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு சென்ற சுபான்ஷு சுக்லா, பெக்கி விட்சன், திபோர் கபு மற்றும் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி ஆகிய 4 பேரும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கி, பயிர்கள் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டனர்.

ஆராய்ச்சி பணி நிறைவடைந்ததும், கடந்த ஜூலை 15-ந்தேதி பூமிக்கு திரும்பினர். சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களும் பயணித்த விண்கலம், வடஅமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி உள்ள கலிபோர்னியாவின் நீண்ட கடற்கரையில் பாதுகாப்பாக தரையிறங்கியது. இதன் மூலம், 41 ஆண்டுகளில் விண்வெளிக்கு சென்று திரும்பிய முதல் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றார்.

இதனிடையே, விண்வெளி சென்று திரும்பிய சுபான்ஷு சுக்லா அமெரிக்காவில் இருந்து கடந்த 17-ந்தேதி இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையம் வந்த சுக்லாவை அவரது குடும்பத்தினர், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை மந்திரி ஜிதேந்திரா சிங், டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா உள்பட பலர் வரவேற்றனர்.

தொடர்ந்து சுபான்ஷு சுக்லா, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது விண்வெளி அனுபவங்கள் குறித்து சுபான்ஷு சுக்லாவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும், விண்வெளி பயணம் மேற்கொண்ட சுபான்ஷு சுக்லாவை பிரதமர் மோடி பாராட்டினார்.

இந்த நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம், இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டம் ஆகியவை குறித்து இருவரும் பேசினர். இந்த சந்திப்பு குறித்து’எக்ஸ்’ தளத்தில் பதிவிட்ட ராஜ்நாத் சிங், “சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதல் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவை சந்தித்ததில் மகிழ்ச்சி.

அவரது ஊக்கமளிக்கும் விண்வெளி பயணம், விண்வெளியில் அவர் மேற்கொண்ட முக்கிய சோதனைகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் மற்றும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டம் ஆகியவை குறித்து நாங்கள் விவாதித்தோம். அவரது சாதனைகளால் தேசம் பெருமை கொள்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story