

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதற்காக கோ-வின் வலைத்தளத்தை மத்திய அரசு உருவாக்கியது. அதில், தடுப்பூசி போடுவதற்கு பெயர் பதிவு செய்யும் வசதியும், தடுப்பூசி கையிருப்பு மற்றும் வினியோகம் உள்ளிட்ட தகவல்களும் இடம்பெற்றுள்ளன. அதில், ஒருவருக்கு தடுப்பூசி போடுவதற்கான நாள், நேரம் ஒதுக்கப்படுகிறது. அந்த முன்பதிவை நீக்கும் வசதியும் உள்ளது. 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு அதற்கான சான்றிதழையும் அதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்நிலையில் கோ-வின் குளோபல் மாநாட்டை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் இன்று திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து உலகெங்கிலும் கோவின் (CoWIN ) இணயதளத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வருவது குறித்து பிரதமர் நரேந்திரமோடி, சர்வதேச கருத்தரங்கில் உரையாற்றினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கான கோவின் இணையதள பயன்பாடு உலகத்திற்காக திறக்கப்படுகிறது. தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்தே, இந்த போரில் உலகளாவிய சமூகத்துடன் நமது அனுபவங்கள், நிபுணத்துவம் மற்றும் வளங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள இந்தியா உறுதிபூண்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைந்ததாகும். ஒவ்வொரு டோசும் கண்காணிக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்கிறோம். இந்திய நாகரிகம் உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக கருதுகிறது.
தொற்றுநோயிலிருந்து வெற்றிகரமாக வெளிவர மனிதகுலத்திற்கு தடுப்பூசி சிறந்த நம்பிக்கை. ஆரம்பத்தில் இருந்தே, எங்கள் தடுப்பூசி மூலோபாயத்தைத் திட்டமிடும்போது முற்றிலும் டிஜிட்டல் அணுகுமுறையை பின்பற்ற இந்தியாவில் முடிவு செய்தோம்.
எல்லா நாடுகளிலும், தொற்றுநோயால் இழந்த அனைத்து உயிர்களுக்கும் எனது உண்மையான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். 100 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு தொற்றுநோய்க்கு இணையாக எதுவும் இருந்தது இல்லை. எந்தவொரு தேசமும், அந்த நாடு எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருந்தாலும், இதுபோன்ற ஒரு சவாலை தனிமையில் தீர்க்க முடியாது என்பதை இந்த அனுபவம் காட்டுகிறது.
இந்திய நாகரிகம் உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக கருதுகிறது. ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற தத்துவத்தின் அடிப்படை உண்மையை பலருக்கு உணர்த்தியுள்ளது என்று அவர் கூறினார்.
முன்னதாக கோவின் எனும் டிஜிட்டல் இணையதளத்தை ஏற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டியுள்ள கனடா, மெக்சிகோ, நைஜீரியா, பனாமா உள்ளிட்ட 50 நாடுகளுக்கு கோவின் செயலி மென்பொருளை இலவசமாக பகிர்ந்து கொள்வது குறித்தும் கொரோனா தடுப்பூசி இந்தியாவின் அனுபவத்தையும், எண்ணத்தையும் பிரதமர் மோடி பகிர்ந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.