இரட்டிப்பாகும் வேகம் குறைந்தது 14 மாநிலங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை - மத்திய மந்திரி தகவல்

கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் வேகம் குறைந்துள்ளதாக மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் கூறினார். 14 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிப்பு எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
இரட்டிப்பாகும் வேகம் குறைந்தது 14 மாநிலங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை - மத்திய மந்திரி தகவல்
Published on

புதுடெல்லி,

மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் நேற்று டெல்லியில் உள்ள தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்துக்கு சென்று பார்வையிட்டார். கோபாஸ்-6800 என்ற நவீன பரிசோதனை எந்திரத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதில், 24 மணி நேரத்தில் 1,200 மாதிரிகளை பரிசோதிக்க முடியும்.

பின்னர், ஹர்ஷவர்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் கால அளவு, முன்பு 11.1 நாட்களாக இருந்தது. கடந்த 3 நாட்களில், இந்த கால அளவு 13.9 நாட்களாக வேகம் குறைந்துள்ளது.

மேலும், குஜராத், ஜார்கண்ட், தெலுங்கானா, ஆந்திரா, சத்தீஷ்கார், அந்தமான், சண்டிகார், அருணாசலபிரதேசம், கோவா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், தாத்ரா நகர் ஹவேலி, புதுச்சேரி ஆகிய 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. இதுபோல், டாமன்-டையு, சிக்கிம், நாகாலாந்து, லட்சத்தீவு ஆகிய மாநிலங்களில் இதுவரை பாதிப்பு ஏற்படவில்லை.

இந்தியாவில், கொரோனா இறப்பு விகிதம் 3.2 சதவீதமாக உள்ளது. அதே சமயத்தில், குணமடையும் விகிதம் 32.83 சதவீதத்தில் இருந்து 33.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவரை, 26 ஆயிரத்து 235 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை செய்து வருகிறோம். இதுவரை 20 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தி, இன்றுடன் ஒரு மைல்கல் சாதனை படைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com