

லக்னோ,
உத்தர பிரதேசத்தில் முதல் மந்திரி யோகி தலைமையில் பாரதீய ஜனதாவின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு ரூ.10 லட்சம் பணம் கேட்டு போனில் மிரட்டல் தகவல் வந்துள்ளது என 6 பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் புகார் அளித்துள்ளனர்.
அவர்கள் வீர் விக்ரம் சிங், பிரேம் நாராயண் பாண்டே, வினய் குமார் திவிவேதி, வினோத் கட்டியார், ஷசாங் திரிவேதி மற்றும் அனிதா ராஜ்புத் என தெரிய வந்துள்ளது. இவர்கள் போலீசில் தனித்தனியே எப்.ஐ.ஆர். அளித்துள்ளனர். அதில் கடந்த இரு நாட்களாக போன் வழியே மிரட்டல் தகவல்கள் வந்துள்ளன. ரூ.10 லட்சம் பணம் தர வேண்டும் என்று வாட்ஸ்ஆப்பில் கேட்டுள்ளனர். பணம் தரவில்லை எனில் குடும்பத்தினரை காலி செய்து விடுவோம் என அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுபோன்ற மிரட்டல்களை அனுப்பியவர் துபாயில் இருந்து அலி புதேஷ் பாய் என தெரிவித்துள்ளார் என அனைவரும் தெரிவித்துள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உறவினர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது என்றும் அச்சுறுத்துவதற்காக விடப்பட்ட மிரட்டல்களாக தெரிகிறது என்றும் கூறியுள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.