

புது டெல்லி,
புதுடெல்லி அருகே காசியாபாத்தில் ஏ.டி.ஏம். எந்திரத்தில் பணம் வராத போதும், கணக்கில் பணம் பிடித்தம் செய்த வங்கி, வாடிக்கையாளருக்கு ரூ.59 ஆயிரத்து 600 இழப்பீடு வழங்குமாறு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி அருகே காசியாபாத்தில் ஏ.டி.ஏம். எந்திரத்தில் பணம் வராத நிலையிலும் வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து ரூ.10 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்ட வழக்கில், பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு மொத்தம் ரூ.59 ஆயிரத்து 600 இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த ஜிதேந்தர் சிங் என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதியன்று காசியாபாத்தில் உள்ள ஆக்சிஸ் வங்கி ஏ.டி.எம், மையத்தில் ரூ.10 ஆயிரம் எடுக்க முயன்றபோது, அவரது வங்கி கணக்கிலிருந்து பணம் பற்று வைக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. ஆனால் ஏ.டி.எம். எந்திரத்திலிருந்து பணம் வெளியே வரவில்லை. இதுகுறித்து அவர் தனது கணக்கு வைத்துள்ள பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியில் புகார் அளித்தார்.
வங்கி தரப்பில் இந்த விவகாரம் ஆக்சிஸ் வங்கிக்கு அனுப்பப்பட்டு அந்தப் பரிவர்த்தனை வெற்றி பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வழங்கப்பட்டதற்கான முறையான தொழில்நுட்ப ஆவணங்களையோ, சி.சி.டி.வி. பதிவுகளையோ அல்லது கணக்குச் சரிபார்ப்பு அறிக்கைகளையோ வங்கி சமர்ப்பிக்கத் தவறிவிட்டதாக நுகர்வோர் குறைதீர் ஆணையம் சுட்டிக்கட்டியது.
ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி ஏ.டி.எம். பரிவர்த்தனை தோல்வியடைத்து பணம் வழங்கப்படாத பட்சத்தில், ஐந்து நாட்களுக்குள் பணம் வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும். காலதாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் நூறு ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். வங்கிகளுக்கிடையேயான இந்தச் சிக்கல்களை வாடிக்கையாளர் மீது திணிக்க முடியாது என்று ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
இதன் அடிப்படையில், பிடித்தம் செய்யப்பட்ட ரூ.10 ஆயிரம் தொகையுடன், கால தாமதத்திற்கான இழப்பீடாக ரூ.29 ஆயிரத்து 600, மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்குச் செலவுக்காக ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.59 ஆயிரத்து 600-ஐ வாடிக்கையாளருக்கு வழங்குமாறு பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கிக்கு ஆணையத்தின் தலைவர் திவ்ய ஜோதி ஜெய்பூரியார் மற்றும் உறுப்பினர் ராஷ்மி பன்சால் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட நாட்களுக்குள் செலுத்தத் தவறினால் ஆண்டுக்கு ஒன்பது சதவீத வட்டியுடன் சேர்த்துத் தொகையை வழங்க வேண்டும் என்றும் ஆணையம் எச்சரித்துள்ளது.