ரூ.30 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - மராட்டியத்தில் அதிர்ச்சி சம்பவம்

மராட்டியத்தில் ரூ.30 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை கொள்ளையர்கள் தூக்கிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரூ.30 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - மராட்டியத்தில் அதிர்ச்சி சம்பவம்
Published on

புனே,

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்துக்கு உட்பட்ட யவட் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 2 மணியளவில் கொள்ளையர்கள் சிலர் புகுந்தனர்.

அவர்கள் முதலில் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் கருப்பு நிற திரவம் ஒன்றை தெளித்து அதை மறைத்தனர். பின்னர் அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் கயிற்றை கட்டி, அதன் மறுமுனையை தாங்கள் வந்திருந்த வாகனத்தில் கட்டி இழுத்தனர். இதில் ஏ.டி.எம். எந்திரம் மொத்தமாக பெயர்ந்து வந்தது. உடனே அதை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

காலையில் பார்த்தபோது அங்கு ஏ.டி.எம். எந்திரம் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், ஸ்டேட் வங்கிக்கும், அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள், சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.

கொள்ளைபோன ஏ.டி.எம். எந்திரத்தில் சுமார் ரூ.30 லட்சம் இருந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்வதற்காக 4 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கொள்ளை சம்பவம் மராட்டியத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏ.டி.எம். எந்திரங்களோடு பணம் கொள்ளையடிக்கப்படும் சம்பவங்களை தடுக்க, விமான நிலையம் போன்ற அதிக பாதுகாப்பு மிகுந்த பகுதிகளை தவிர மற்ற இடங்களில், ஏ.டி.எம். எந்திரங்களை சுவர், தூண் அல்லது தளத்துடன் சிமெண்டு பூச்சு வைத்து ஒட்டிவைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. இதற்காக செப்டம்பர் இறுதிவரை கெடுவும் அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com