சேலத்தில் கனிமவளக் கொள்ளை குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர்கள் மீது தாக்குதல் - எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்


சேலத்தில் கனிமவளக் கொள்ளை குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர்கள் மீது தாக்குதல் - எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்
x

ஊடகவியலாளர்கள் பயமின்றி தங்கள் பணியை ஆற்றுவதற்கு உரிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என நெல்லை முபாரக் வழங்கியுள்ளார்.

சென்னை,

சேலத்தில் செம்மண் கனிமவளக் கொள்ளை குறித்து களச்செய்தி சேகரித்த செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

"சேலம் மாவட்டம், விள்ளியம்பட்டி பகுதியில் செம்மண் கனிமவளக் கொள்ளை குறித்து செய்தி சேகரிக்கும் ஊடகப் பணியில் ஈடுபட்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் சிலம்பரசன் மற்றும் அவருடன் சென்ற கேமராமேன் ஆகியோர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

சமூகத்தில் நிலவும் அநீதிகளையும், குறிப்பாக கனிம வளக் கொள்ளை போன்ற சட்டவிரோத செயல்களை அம்பலப்படுத்துவதற்காக உயிரைப் பணயம் வைத்து துணிச்சலுடன் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறை, ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். இது ஊடக சுதந்திரத்திற்கு எதிரான கடுமையான அச்சுறுத்தலாகும்.

இத்தகைய சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீதும், இத்தாக்குதலைத் தூண்டியவர்கள் மீதும் உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மேலும், கனிம வளக் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது கடுமையான தண்டனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது.

ஊடகவியலாளர்கள் பயமின்றி தங்கள் பணியை ஆற்றுவதற்கு உரிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story