

மராத்தியர்கள் மீது தாக்குதல்
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி உள்ளிட்ட பகுதிகளில் மராத்தியர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். மராட்டியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை மராட்டியம் உரிமை கோரி வருகிறது. இந்தநிலையில் பெலகாவில் உள்ள கடைகளில் இருந்த மராத்தி பெயர் பலகைகளை சிலர் கருப்பு மையால் அழித்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:-
கடந்த 8 நாட்களாக பெலகாவில் மராத்தியர், சிவசேனா தலைவர்கள், நிருபர்கள் கன்னட அமைப்புகளால் தாக்கப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. பெலகாவி இந்தியாவின் ஒரு பகுதி. மராட்டியம், காநாடகா இடையே உள்ள மொழி பிரச்சினையை இந்த அளவுக்கு பெரிதுப்படுத்தக்கூடாது.
இது கர்நாடக அரசின் பொறுப்பும் கூட தான். இது அரசியல் என்பதால், நிலைமை எல்லை மீறிப்போனால், சிவசேனா மற்றும் மாநில அரசு பொறுப்பாகாது. தேர்தலில் போட்டியிடுவதால் மேற்கு வங்கத்தில் நடைபெறும் கலவரம் மத்திய அரசுக்கு பெரிதாக தெரிகிறது. ஆனால் பெலகாவில் நடப்பது தெரியவில்லை.
இந்த விவகாரத்தில் மராட்டிய அரசு உறுதியான முடிவை எடுக்க வேண்டும். அனைத்து கட்சி பிரதிநிதிகளும் விரைவில் பெலகாவி சென்று பாதிக்கப்பட்ட மராத்தி மக்களுக்கு நமது ஒற்றுமையை காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே எல்லைப்பிரச்சினை காரணமாக மராட்டியம்- கர்நாடகம் இடையே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.