பா.ஜ.க. ஆட்சியில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது - ராகுல் காந்தி

மாட்டிறைச்சி என்ற பெயரில் நடக்கும் குற்றச்சம்பவங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

மராட்டிய மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக ஓடும் ரெயிலில் ஹாஜி அஸ்ரப் என்ற முதியவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

வெறுப்பை, அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி அதிகாரப் படிக்கட்டுகளில் ஏறியவர்கள் நாடு முழுவதும் தொடர்ந்து அச்சத்தின் ஆட்சியை நிறுவி வருகின்றனர்.

ஒரு கூட்டத்தின் வடிவத்தில் மறைந்திருக்கும் வெறுப்புக் கூறுகள் வெளிப்படையாக வன்முறையைப் பரப்பி, சட்டத்தின் ஆட்சிக்கு சவால் விடுகின்றன.

பா.ஜ.க அரசிடம் இருந்து இந்த அயோக்கியர்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது, அதனால்தான் இதை செய்யும் துணிச்சலை வளர்த்துக் கொண்டுள்ளனர்.

சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் தொடர்வதையும், அரச இயந்திரம் மவுனமாக பார்த்துக் கொண்டிருக்கிறது.

மாட்டிறைச்சி என்ற பெயரில் நடக்கும் குற்றச்சம்பவங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும்.

இந்தியாவின் வகுப்புவாத ஒற்றுமை மற்றும் இந்திய மக்களின் உரிமைகள் மீதான எந்தவொரு தாக்குதலும் அரசியலமைப்பின் மீதான தாக்குதலாகும், அதை நாம் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.

பா.ஜ.க. எவ்வளவு முயற்சி செய்தாலும், வெறுப்புக்கு எதிராக இந்தியாவை ஒன்றிணைக்கும் இந்த வரலாற்றுப் போரில் எந்த விலை கொடுத்தேனும் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அதில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com