

புனே,
மராட்டிய மாநிலம், புனே ஹடப்சர் பகுதியில் உஷா கிரண் என்ற தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரி கழிவறையில் கடந்த புதன்கிழமை மாலை குறைந்த வீரியம் கொண்ட ஐ.இ.டி. வெடிகுண்டு கிடந்தது. தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற வெடிகுண்டு கண்டறியும் படையினர் வெடிகுண்டை கைப்பற்றி செயலிழக்க செய்தனர். இந்த சம்பவம் புனேயில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் வெடிகுண்டு வைத்தவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் வலைவீசி தேடினர். ஆஸ்பத்திரியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் வெடிகுண்டு வைத்தவரை போலீசார் அடையாளம் கண்டனர். அந்த நபர் மும்பையில் இருந்து கொல்கத்தா நோக்கி செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தப்பிச்செல்வது தெரியவந்தது. இதையடுத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினரின் உதவியுடன் நாக்பூர் ரெயில் நிலையத்தில் அவரை கைது செய்தனர்.
விசாரணையில் அந்த நபர் புனே மஞ்சரி பகுதியை சேர்ந்த சிவாஜி ரதோடு (வயது 26) என்பதும், அவர் அங்கு ஆயத்த ஆடைகள் விற்கும் கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது கடையில் சோதனை நடத்தினர். அப்போது வெடிகுண்டை வெடிக்க செய்ய பயன்படுத்தப்பட்ட 'டைமரின்' காலி பெட்டி அங்கு கண்டெடுக்கப்பட்டது.
சிவாஜி ரதோட்டிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. இவர் சம்பவத்தன்று அந்த ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அப்போது சிகிச்சைக்கு டாக்டர் அதிக பணம் கேட்டதாக தெரிகிறது. இதனால் டாக்டரிடம் பணம் பறிக்கும் நோக்கில், ஆஸ்பத்திரியில் வெடிகுண்டு வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா?. வேறு பின்னணி உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.