“காவல்துறை மீதான எண்ணம் மாறியுள்ளது” - பிரதமர் மோடி

மக்கள் போலீசாரை பார்க்கும் போது தங்களுக்கு உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையை பெறுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
“காவல்துறை மீதான எண்ணம் மாறியுள்ளது” - பிரதமர் மோடி
Published on

காந்திநகர்,

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக 4 மாநிலங்களில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது பயணத்தின் 2-ம் நாளான இன்று, காந்திநகரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டார்.

திறந்த வாகனத்தில் சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு திரண்டிருந்த மக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து காந்திநகரில் உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக கட்டிடத்தை நாட்டிற்கு அற்பணித்த பிரதமர் மோடி, அந்த பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.

காவல் அறிவியல் மற்றும் மேலாண்மை, குற்றவியல் சட்டம், குற்றப்புலனாய்வு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான பாடப்பிரிவுகளில் படித்த மாணவர்களுக்கு பிரதமர் மோடி பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.

இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, கடந்த காலங்களில் காவல்துறை மீது தவறான அபிப்ராயம் இருந்ததாகவும், தற்போது அந்த எண்ணம் மாறியுள்ளதாகவும் தெரிவித்தார். முன்பெல்லாம் காவல்துறை என்றாலே சீருடை, துப்பாக்கி, அதிகாரம் என்று நம்பப்பட்டு வந்ததாகவும், அந்த தோற்றத்தை தற்போதைய அரசு மாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.

இப்பொழுது மக்கள் போலீசாரை பார்க்கும் போது தங்களுக்கு உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையை பெறுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தற்போது பாதுகாப்பு படையினருக்கு உடல் தகுதி மட்டும் போதாது என்றும் அவர்கள் தொழில்நுட்ப அறிவும் பெற்றிருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com