அதிர்ச்சி சம்பவம்: 5 ரூபாய்க்காக கொல்லப்பட்ட மூதாட்டி


அதிர்ச்சி சம்பவம்: 5 ரூபாய்க்காக கொல்லப்பட்ட மூதாட்டி
x
தினத்தந்தி 14 April 2025 2:05 AM IST (Updated: 14 April 2025 2:06 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி இறந்ததாக அந்த நபர் நாடகமாடியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரி,

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளியில், 5 ரூபாய் தொடர்பான ஒரு சிறிய தகராறில் 75 வயது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இறந்தவர் சந்திரா காலனியைச் சேர்ந்த மூலா கங்குலம்மா என அடையாளம் காணப்பட்டார். அவர் பிழைப்பு நடத்துவதற்காக உள்ளூர் திருவிழாக்களில் (கண்காட்சிகள்) வளையல்கள் மற்றும் பொம்மைகளை விற்று வந்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக அவரது அக்கா மகனான வெங்கட்ரமணா ரங்கா ரெட்டி என்பவர் தண்ணீர் தொட்டியில் விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய ரூ.2 லட்சம் தேவைப்பட்டது.

இதனையடுத்து நேற்று முன்தினம் ரூ.2 லட்சத்தை எடுத்துக்கொண்டு கங்குலம்மா, விஷ்ணுவர்தன் (22) என்பவரது ஷேர் ஆட்டோவில் ஏறி திருப்பதிக்கு புறப்பட்டார். சி.எஸ்.ஐ. தேவாலயம் அருகே வந்தபோது கங்குலம்மா, டிரைவரிடம் ரூ.20 கொடுத்தார். ஆட்டோ கட்டணம் ரூ.15 போக மீதி ரூ.5 திருப்பிக்கொடுக்க வேண்டும். ஆனால் அவர் மீதி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கங்குலம்மா அவரை திட்டியதாக தெரிகிறது.

மேலும் மீதி காசு தரும் வரை ஆட்டோவை விட்டு இறங்க முடியாது என்று பிடிவாதமாக கூறியுள்ளார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த விஷ்ணுவர்தன், மூதாட்டியை பசினிகொண்டா பஞ்சாயத்தில் உள்ள ராமாச்சார்ல பள்ளி அருகே அழைத்து சென்று அடித்து கொலை செய்தார். பின்னர் உடலை சாலையில் வீசிய டிரைவர், ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி இறந்ததாக நாடகமாடியதாக தெரிகிறது.

இதனை அறிந்த போலீசார் விஷ்ணுவை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே மூதாட்டி வைத்திருந்த ரூ.2 லட்சத்தை காணவில்லை. இதனை திருடியது யார் என்ற விசாரணையும் நடந்து வருகிறது.

1 More update

Next Story