தானியங்கி முறையில் கட்டணம் வசூலிக்கும் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கர் - டிசம்பர் முதல் கட்டாயமாகிறது

நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களிடம் தானியங்கி முறையில் கட்டணம் வசூலிப்பதற்கு வகை செய்யும் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கர் தொழில்நுட்பம் வரும் டிசம்பர் 1-ந் தேதியில் இருந்து கட்டாயமாக்கப்படுகிறது.
தானியங்கி முறையில் கட்டணம் வசூலிக்கும் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கர் - டிசம்பர் முதல் கட்டாயமாகிறது
Published on


தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் முக்கிய நகரங்களை இணைக்கும் நான்கு வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நாட்டில் பெரும்பாலான நகரங்களில் நான்கு வழிச்சாலை திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இதற்காக குறிப்பிட்ட தூர இடைவெளியில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களுக்கு சாலை பராமரிப்பு மற்றும் பயன்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்கச்சாவடிகளில் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தால், அந்த வாகனம் சுங்கக்கட்டணம் செலுத்த தேவையில்லை என்ற விதி உள்ளது.

இதனை பயன்படுத்தி பெரும்பாலான வாகனங்கள் கட்டண சலுகை பெற்று வந்தன. இதனால், மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டது.

மேலும், மத்திய அரசு கடந்த சில வருடங்களாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையை அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தை அரசு துறைகளில் 100 சதவீதம் செயல்படுத்த வேண்டும் என்பதற்காக பெரும்பாலான பண பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறையில் கொண்டு வரப்படுகிறது.

அதன்படி, வருகிற 1-ந் தேதி முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை அமலுக்கு வருகிறது. இதற்கு பாஸ்டேக் என்று பெயரிடப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டுவோரிடம் சுங்கச்சாவடி ஊழியர்களால் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், சில நேரங்களில் அதிக கட்டணம் வசூலித்தல், நீண்ட நேரம் காத்திருக்கச் செய்தல் போன்றவை பயணிகளின் எரிச்சலுக்கான காரணங்களாக உள்ளன.

இதை சரி செய்வதற்காகவே பாஸ்டேக் என்ற புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன ஸ்டிக்கராகும். இதற்குள் நுண்ணிய சிப் மற்றும் ஆன்டனா பொருத்தப்பட்டு இருக்கும். வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் இதை ஒட்டிக்கொள்ளலாம். இந்த ஸ்டிக்கர்களில் உள்ள குறியீடு ஆர்.எப்.ஐ.டி. என்று சொல்லப்படும் ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது.

வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள பாஸ்டேக் ஸ்டிக்கர், சுங்கச்சாவடிகளை நெருங்கும்போது அங்கு வைக்கப்பட்டுள்ள கருவியுடன் உடனடியாக தொடர்பை ஏற்படுத்தும். அந்த வாகனத்தின் ரகம் என்ன? அதற்காக வசூலிக்கப்பட வேண்டிய கட்டணம் எவ்வளவு? என்பதை உடனடியாக துல்லியமாக கணிக்கும்.

மேலும், வாகன ஓட்டியின் வங்கி கணக்கை இந்த கருவி இணைப்பதோடு, அங்கிருந்து சுங்கக் கட்டணமாக அந்த வாகனம் செலுத்த வேண்டிய கட்டணத்தை மட்டும் தானாக எடுத்துக்கொள்ளும். எனவே பாஸ்டேக் ஒட்டப்பட்ட வாகனங்களுக்கென்று தனி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வழியில் வாகனங்கள் நிற்காமல் போய்க்கொண்டே இருக்க இதன் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த பாதையில் பாஸ்டேக் ஒட்டாத வாகனங்கள் வந்துவிட்டால், 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

வருகிற 1-ந் தேதியில் இருந்து அரசு இதை கட்டாயமாக்க உள்ளது. தற்போது தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 400-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அதாவது சுங்கச்சாவடியை கடந்து வரும் வழி மற்றும் செல்லும் வழி என தலா ஒரேயொரு பாதையை தவிர பிற பாதைகள் அனைத்தும் பாஸ்டேக் வழித்தடங்களாக மாற்றப்பட்டுள்ளன. டிஜிட்டல் முறையில் கட்டணத்தை வசூலிப்பதால், சுங்கச்சாவடிகளில் பணப் பரிமாற்றம் இருக்காது. எனவே பணத்தை வசூலிக்கவும், கையாளவும் ஆட்கள் அவசியமில்லை.

சுங்கக் கட்டணம் செலுத்த வரிசையில் வாகனங்கள் காத்து நிற்பது தவிர்க்கப்படுகிறது. இதனால் வாகனங்களில் எரிபொருள் செலவு குறைகிறது.

இந்த திட்டத்தில் வாகனங்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கப்படும். அத்துடன் பார்கோடு வசதி கொண்ட பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒன்றும் வழங்கப்படும். அந்த பாஸ்டேக் ஸ்டிக்கரை பல்வேறு வங்கிகள் வழங்குகின்றன. அந்த வங்கிகளின் பெயர்களை என்.பி.சி.ஐ. இணையதளத்தில் காணலாம். வாகனங்களின் தரத்துக்கு ஏற்ப வெவ்வேறு நிறங்களில் ஸ்டிக்கர்கள் தரப்படுகின்றன. வைலட், ஆரஞ்ச், பச்சை, மஞ்சள், பிங்க், ஊதா, கருப்பு ஆகிய வண்ணங்கள் உள்ளன. உதாரணமாக, காருக்கு தனியார் வங்கி ஒன்றில் ரூ.500 செலுத்த வேண்டும். இதில், குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் ரூ.200, பாஸ்டேக் வைப்புத்தொகை ரூ.200, இணைப்பு கட்டணம் ரூ.100 ஆகியவை அடங்கும்.

அமேசான் போன்ற ஆன்லைன் வர்த்தகம் மூலமாகவும் பெற வசதி உள்ளது. சில சுங்கச்சாவடிகள், பெட்ரோல் பங்க், ஆர்.டி.ஓ. அலுவலகத்திலும் அதை வாங்கிக்கொள்ளலாம். மைபாஸ்டேக் என்ற இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்தும் பெற்றுக்கொள்ளலாம். வாகனங்களுக்கு ஏற்ப இந்த ஸ்டிக்கரை ரீசார்ஜ் செய்து கொண்டு பயணிக்கலாம். குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகையை ரூ.200 என்று தனியார் வங்கி ஒன்று நிர்ணயித்துள்ளது.

இந்த பாஸ்டேக் ஸ்டிக்கர் மூலம் வங்கி கணக்கை இணைத்துக்கொள்ளலாம். கட்டணம் எடுக்கப்படும் போதெல்லாம் எஸ்.எம்.எஸ். தகவலும் வந்துவிடும். வாகனத்தை விற்கும்போது பாஸ்டேக் உடனான இணைப்பை துண்டிக்கவும் வசதி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com